இலங்கையில் இருந்து கடத்தி வந்தபோது தங்கக்கட்டிகள் நடுக்கடலில் வீச்சு?.. 3 பேரை பிடித்து அதிகாரிகள் விசாரணை

ராமநாதபுரம்: மண்டபம் அருகே நடுக்கடலில் பல கோடி மதிப்புள்ள தங்கக்கட்டி மூட்டை வீசப்பட்டதா என அதிநவீன சாதனங்கள் மூலம் பாதுகாப்பு அதிகாரிகள் கடலுக்கு அடியில் தீவிரமாக தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்திற்கு மன்னார் வளைகுடா கடல் வழியாக தங்கம் கடத்தி வரப்படுவதாக தகவல் கிடைத்து, மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள், இந்திய கடலோர காவல் படையினர் மண்டபம் தென்கடல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மண்டபத்தைச் சேர்ந்த ஒரு பைபர் படகு, மண்டபம் தென் துறைமுகம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்படகை நிறுத்தி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்ய முயன்றபோது, அதில் இருந்தவர்கள் திடீரென படகில் இருந்து ஒரு மூட்டையை கடலில் தூக்கி போட்டனர். இதையடுத்து அப்படகை இந்திய கடலோர காவல் படையினர் சுற்றி வளைத்தனர். படகிலிருந்த 3 பேரை பிடித்து மண்டபம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

இதில் வேதாளையை சேர்ந்த ஒருவருக்கு இலங்கையில் இருந்து தங்கக்கட்டிகளை கடத்தி வந்ததாகவும், கடலில் ரோந்து படகை கண்டதும், தங்கக்கட்டி மூட்டையை கடலுக்குள் வீசியதும் தெரிந்தது. இதன்படி படகில் இருந்து கடலில் வீசிய மூட்டையை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள், இந்திய கடலோர காவல் படை வீரர்கள் நேற்று அதிகாலை முதல் தேடினர். எதுவும் சிக்காத நிலையில் கடல் அடிப்பகுதி வரை சென்று தேட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, முத்து குளிப்போர், கடல் விளையாட்டு வீரர்கள் மூலம் கடலுக்கு அடியில் தேடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

தங்க மூட்டையை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் ஏற்பாட்டில், மாற்று வழிகளில் கைப்பற்றி மீண்டும் எடுத்துச் சென்று விடாமலிருக்க மண்டபம் தென் கடல் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிர கண்காணிப்பையும் மீறி, பைபர் படகில் தங்கக்கட்டிகளை கடத்த முயன்ற சம்பவம் ஒன்றிய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

கடலில் வீசிய மூட்டையில் இருப்பது தங்கக்கட்டிகள் தான் என பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் உறுதி செய்யப்படவில்லை. படகில் வந்த 3 பேர் கூறியதன் அடிப்படையில் தங்கக்கட்டிகளா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: