திருமண தகவல் மையம் மூலம் இளம்பெண்களை மயக்கிய காதல் மன்னன் கைது: நகை, பணம் மோசடி செய்தது அம்பலம்

சென்னை: திருமண தகவல் மையம் மூலம், இளம்பெண்களை மயக்கி, நகை மற்றும் பணம் பறித்த காதல் மன்னனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுக்கோட்டை, ஆலங்குடி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், திருமண தகவல் மையத்தில் மாப்பிள்ளை வரன் தேடினார். அதில் அந்த பெண் தன் விவரங்களை பதிவிட்டு இருந்தார். இதை வேலூர், காந்தி நகர், தாஜ்புராவை சேர்ந்த முகமது உபேஸ் (37) என்பவர் பார்த்துள்ளார். இதையடுத்து அவர் அந்த பெண்ணிடம் தொடர்பு கொண்டு, திருமண தகவல் மையத்தில் புகைப்படத்தை பார்த்தேன். எனக்கு உன்னை பிடித்து இருக்கு என்று கூறியுள்ளார். இதையடுத்து, அந்த பெண்ணிடம், உபேஸ் நேரில் சந்திக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார். அவரும், திருமணம் செய்துகொள்ளும் நபர் தானே என நினைத்து எங்கு வர வேண்டும் என்று கேட்டுள்ளார்.

அதற்கு முகமது உபேஸ் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள பிரபல வணிக வளாகத்திற்கு வரும்படி கூறியுள்ளார். அந்த பெண்ணும் வருவதாக கூறியுள்ளார். அதன்படி அந்த பெண் கடந்த டிசம்பர் மாதம் 13ம்‌ தேதி, சென்னைக்கு வந்து ராயப்பேட்டையில் அவரை சந்தித்துள்ளார். இதற்கிடையில், தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது. நகை இருந்தால் கொண்டு வா. திருமணத்தின் போது நகையை திருப்பி கொடுக்கிறேன் என கூறியுள்ளார்.

இதை நம்பி அந்த ெபண் 20 சவரன் நகையுடன் வந்திருந்தார். நகையை வாங்கிய உபேஸ், அதோடு தன் செல்போனை ஆப் செய்து விட்டார். அதன்பின் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண், அண்ணா சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடிவந்தனர். போலீசார் தன்னை பிடித்து விடுவார்கள் என்று உபேஸ், சேலம், கோவை பகுதியில் சுற்றி திரிந்துள்ளார். இதற்கிடையில் ஈரோட்டில் இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஈரோட்டில் வைத்து தனிப்படை போலீசார் உபேஸை கைது செய்து, சென்னை கொண்டு வந்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், நீண்ட நாள் திருமணம் ஆகாத பெண்கள், விதவை பெண்களை குறிவைத்து திருமணம் ஆசை காட்டி நகை-பணம் வாங்கி ஏமாற்றியது தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.1 லட்சம் பணம், ஒன்றரை சவரன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். பிறகு அவரை சிறையில் அடைத்தனர்.

Related Stories: