திருமங்கலம், திருவல்லிக்கேணியில் பர்தா அணிந்து சென்று நகை கடையில் திருட்டு

அண்ணாநகர்: திருமங்கலம் அண்ணாநகர் 2வது அவென்யூவில் தனியாருக்கு சொந்தமான நகை கடை உள்ளது. நேற்று முன்தினம் பர்தா அணிந்து வந்த இரண்டு பெண்கள், தங்க கம்மல் வாங்குவதற்கு கடைக்காரரிடம் வெகுநேரமாக நகை விலையை பற்றி கேட்டுள்ளனர். பிறகு ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து வருவதாகவும் கூறி விட்டு சென்றவர்கள் மறுபடியும் கடைக்கு வரவில்லை. கடையை மூடுவதற்கு முன்பு நகைகளை சரி பார்த்தபோது அதில் 16 கிராம் கொண்ட இரண்டு சவரன் கம்மல் மாயமானது தெரிய வந்தது. பின்னர் கடையில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் பர்தா அணிந்து வந்த பெண்கள் நகைகளை திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து நகை கடை மேனேஜர் அரிசங்கர் (42) திருமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்து கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசாரிடம் ஒப்படைத்தார். இதுபோல, திருவல்லிக்கேணி குப்பமுத்து தெருவில், ராஜேஷ் என்பவர் நகை கடைக்கு நேற்று முன்தினம் 2 பெண்கள் பர்தா அணிந்து கொண்டு நகைகள் வாங்க வந்தனர்.

அவர்கள் சென்ற பிறகு கடை ஊழியர் மகேஷ் பெண்களிடம் காட்டிய நகைகளை எடுத்து சரிபார்த்த போது, ஒன்றரை சவரன் மதிப்புள்ள ஒரு வளையல் மட்டும் மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மகேஷ் கடையில் உள்ள சிசிடிவு பதிவுகளை எடுத்து பார்த்தார். அதில், நகைகள் வாங்க வந்த இரண்டு பெண்கள், ஒரு வளையலை மட்டும் எடுத்து தங்களது ஆடைக்குள் மறைத்து சென்றது தெரியவந்தது. பின்னர் சம்பவம் குறித்து நகைக்கடை உரிமையாளர் ராஜேஷ் சிசிடிவி பதிவுகளுடன் ஜாம் பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவாக உள்ள 4 பெண்களை தேடி வருகின்றனர்.

Related Stories: