பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் இரு கல்லூரி மாணவர்களிடையே மோதல்: பயணிகள் அலறி அடித்து ஓட்டம்

பெரம்பூர்: சென்னை பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்தில், இரு கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலால், பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு நேற்று காலை மின்சார ரயில் வந்து கொண்டிருந்தது. அதில், வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி மாணவர்கள் மற்றும் தண்டையார்பேட்டையில் உள்ள தியாகராய கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர்.

காலை 9 மணியளவில் மின்சார ரயில் பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே வந்தபோது, திடீரென 2 கல்லூரியை சேர்ந்த மாணவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு, கத்தியை வைத்து சண்டை போட்டுக்கொண்டு, பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் இறங்கி, வண்ணாரப்பேட்டை வழியாக ஓடத் தொடங்கினர்.

அப்போது, நடைபாதையில் இருந்த பயணிகள் அனைவரும் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரத்தில் கல்லூரி மாணவர்கள் கற்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. உடனடியாக நடைமேடைக்கு வந்த ரயில்வே போலீசார் அங்கிருந்த மாணவர்களை பிடிக்க முயன்றபோது தப்பி ஓடி விட்டனர்.

தகவலறிந்த சென்ட்ரல் ரயில்வே இன்ஸ்பெக்டர் சசிகலா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

ஏற்கனவே, சில மாதங்களுக்கு முன்பு பெரம்பூர் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்ட விவகாரத்தில் சுமார் 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் கத்தியுடன் சண்டை போட்டுக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பேசின்பிரிட்ஜ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: