இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு; மெரினா சிக்னலில் அந்தரத்தில் டைவ் அடித்து வாலிபர் சாகசம்: 3 பேருக்கு நூதன தண்டனை

சென்னை: மெரினா காமராஜர் சாலையில் விவேகானந்தர் சிக்னலில் வாகனங்கள் நிற்கும் போது, வாலிபர் ஒருவர் சாலையின் இடையே அந்தரத்தில் டைவ் அடித்து சாகசம் செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை பிடித்து போலீசார் நூதன தண்டனை வழங்கியுள்ளனர்.

சென்னை மெரினா காமராஜர் சாலையில் கடந்த 5ம் தேதி விவேகானந்தர் இல்லம் எதிரே உள்ள சிக்னலில் அனைத்து வாகனங்களும் நின்றன. அப்போது வாலிபர் ஒருவர், தனது நண்பர்களிடம் செல்போனில் வீடியோ எடுக்க சொல்லி, அந்தரத்தில் டைவ் அடித்து சாகசம் செய்து தனது கெத்தை காட்டினார். பிறகு அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து சமூக வலைத்தளங்களில், ‘சாலையில் சாகசம் செய்யும் வாலிபர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்குமா’ என்று பதிவு செய்து இருந்தனர்.

அதைதொடர்ந்து சாகசம் செய்த வாலிபர்கள் குறித்து அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வீடியோ பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி, அதில், விக்னேஷ் என்ற வாலிபர் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேரை நேற்று முன்தினம் பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது, ‘‘ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நாங்கள் மெரினா கடற்கரையில் டைவ் அடிப்பது குறித்து பயிற்சி செய்வோம். அப்படி கடந்த 5ம் தேதி டைவ் அடித்து பயிற்சி முடித்துவிட்டு வரும் போது, சிக்னலில் வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. உணர்ச்சி வசப்பட்டு எங்களது கெத்தை காட்டும் வகையிலும், அனைவரும் எங்களை பார்க்க செய்யவே டைவ் அடித்து சாகசம் செய்தோம்’’ என்று கூறியுள்ளனர்.

இதை தொடர்ந்து விக்னேஷ் உள்பட 3 வாலிபர்களை போலீசார் கடுமையாக எச்சரித்தும், கடிதம் எழுதி வாங்கிக் கொண்டு, இனி போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு செய்யமாட்டோம் என்று வீடியோ எடுத்து அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து நூதன தண்டனை வழங்கி உள்ளனர்.

Related Stories: