உதான் திட்டத்தில் ஓசூர் விமான நிலையம் இடம்பெறாது என அறிவிப்பு: தமிழ்நாட்டை புறக்கணிப்பதாக திமுக புகார்..!

டெல்லி: உதான் திட்டத்தின் கீழ் புதிய விமான நிலையங்கள் அமையும் பட்டியலில் இருந்து ஓசூர் நீக்கப்பட்டதால் அந்நகரை சேர்ந்த தொழிலதிபர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உதான் திட்டத்தின் கீழ் தமிழ் நாட்டில் அமைக்கப்படும் விமான நிலையங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி வில்சன் எழுப்பிய எழுத்து பூர்வமான கேள்விக்கு பதிலளித்த விமான போக்குவரத்து துறை அமைச்சர் வி.கே.சிங் ஓசூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டதை குறிப்பிட்டார்.

பெங்களுர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 150 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வேறு விமான நிலையங்கள் அமைக்கப்படக்கூடாது என்ற அம்சம் ஒப்பந்தத்தில் இடம் பெற்றதால் ஓசூரை கைவிட நேர்ந்ததாக அவர் கூறினார். பெங்களூரு கம்பிகௌடா சர்வதேச விமான நிலைய நிறுவனம் மற்றும் ஒன்றிய அரசுக்கிடையிலான ஒப்பந்தபடி ஓசூர் விமான நிலையத்தில் 2033 வரை எந்த மேம்பாட்டு பணியையும் செய்ய இயலாது என்று அவர் கூறினார்.

அதே நேரத்தில் இந்த ஒப்பந்தத்தில் இருந்து மைசூர் மற்றும் அசல் விமான நிலையங்களுக்கு மட்டுமே விலக்களிக்க பட்டதாக வி.கே.சிங்  தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஓசூரை சேர்ந்துள்ள தொழிலதிபர்கள் முடிவை  ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். சென்னையிலிருந்து ஓசூருக்கு விமான சேவையை தொடங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் ஒன்றிய அரசின் தன்னிச்சையான முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் வி.கே.சிங்கின் கருத்துக்கு டிவீட்டர் வாயிலாக பதிலளித்துள்ள திமுக எம்.பி .வில்சன் மைசூர் மற்றும் ஹசன் நகரங்களில் விமான நிலையங்கள் செயல்பட அனுமதி அளித்தது போன்று ஓசூரிலும் விமான நிலையம் செயல்பட அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். வளர்ச்சி திட்டங்களில் தமிழ்நாட்டையும், தமிழர்களையும் ஒன்றிய அரசு புறக்கணிப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளதாக அவர் சாடியுள்ளார்.

Related Stories: