கடவூர், தோகைமலை பகுதியில் நனைந்த வைக்கோல் வெயிலில் உலர்த்தும் பணி தீவிரம்-சாரல் மழையால் சம்பா அறுவடையும் பாதிப்பு

தோகைமலை : கடவூர் மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்ததால் சம்பா அறுவடையில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் பாதிப்பு அடைந்து உள்ளனர். மேலும் வைக்கோல் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளது.கரூர் மாவட்டம் தோகைமலை மற்றும் கடவூர் பகுதிகளில் சம்பா சாகுபடி செய்த நெல்களை கடந்த 15 நாட்களுக்கு முன்பு அறுவடை பணிகளை தொடங்கினர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடவூர் மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் சாரல் மழை தொடர்ந்து பொழிந்து வந்தது. இதனால் அறுவடையில் ஈடுபட்ட விவசாயிகளும், அறுவடைக்கு தயாராகும் விவசாயிகளும் சேதம் ஆனதால் கவலை அடைந்தனர்.

இதேபோல் இயந்திரம் மூலம் அறுவடை செய்த பின்பு வயலில் கிடந்த வைக்கோல் புற்கள் மழைநீரில் நனைந்து சேதம் ஆனது. தோகைமலை மற்றும் கடவூர் ஒன்றிய பகுதிகளில் இந்த பருவ ஆண்டில் சம்பா சாகுபடியை தொடங்கி உள்ள விவசாயிகள் டிகேஎம்-13, பிபிடி-5204, சிஆர்-1009, சிஓ-51, சிஓ-52, ஆகிய நெல் ரகங்களின் விதைகளை வேளாண்மைதுறை மற்றும் தனியார் கடைகளில் பெற்று நெற்களை தெளித்தனர். கடந்த புரட்டாசி மாதம் இறுதிக்குள் 15 அல்லது 20 நாள் பயிர்களை நடவு செய்த வயல்களில் தற்போது நெல்மணிகள் முதிர்ச்சி பெற்றநிலையில் விவசாயிகள் அறுவடையில் தீவிரம் காட்டி வருகின்றனர். மேற்படி பருவத்தில் சாகுபடியை தொடங்கினால் கொல நோய், யானைக்கொம்பான், இலை சுருட்டு போன்ற நோய்கள் தாக்காது என்று கருத்தில் கொண்டு விவசாயிகள் நடவு பணிகளை தொடங்கினர்.

ஆனால் சில விவசாயிகள் பருவம் தவறி 30 நாள் பயிர்களை கடந்த (புரட்டாசி மாதத்திற்கு பிறகு) வயல்களில் நடவு செய்திருந்தனர். இதனால் இந்த பயிர்கள் இன்னும் 10 நாட்கள் கடந்து அறுவடைக்கு வரும் என்று தெரிவிக்கின்றனர். பருவம் தவறி நடவு செய்த இந்த வயல்களில் கொலநோய், யானைக்கொம்பான், இழைசுருட்டு போன்ற நோய்கள் தாக்கத்தில் இருந்து பயிர்களை காப்பாற்றி வந்தனர். 120 நாட்களில் மகசூல் அடையும் சம்பா பயிர்களின் நெல்மணிகள் முதிர்ச்சி அடைந்து தற்போது அறுவடை பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடவூர் மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களும், அறுவடைக்கு பின்பு வயலில் கிடந்த வைக்கோல்களும் மழைநீரில் நனைந்து சேதம் ஆனது.

இதில் மழையின் காரணமாக அறுவடை செய்யப்பட்டு உள்ள நெல்களை கொட்டி வைக்க இடம் இல்லாமலும், அறுவடைக்கு பிறகு வைக்கோல்களை சேகரிக்க முடியாமலும் விவசாயிகள் அவதிக்கு உள்ளாகினர். இதேபோல் அறுவடைக்கு தயாராக உள்ள வயல்களில் மழையின் காரணமாக நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து தரையில் கீழே கிடக்கிறது. இதனால் விவசாயிகள் தங்களது வயலில் உள்ள நெல்மணிகள் மீண்டும் முளைத்துவிடுமோ என்ற கவலையில் உள்ளனர். பல்வேறு செலவுகளுக்கு இடையே சாகுபடி செய்த நெற்பயிர்களை அறுவடை செய்து லாபம் ஈட்டலாம் என்ற நம்பிக்கையில் இருந்து வந்த விவசாயிகள் தற்போது பெய்த மழையின் காரணமாக சேதம் ஏற்பட்டு உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

தற்போது கடந்த 2 நாட்களாக வெயில்தாக்கம் இருப்பதால் விவசாயிகள் நிம்மதி அடைந்து உள்ளனர். இதனை அடுத்து மழையினால் நனைந்த வைக்கோல்களை விவசாயிகள் வெயிலில் உலர்த்தி வருகின்றனர். இதேபோல் மழையினால் வயலில் சாய்ந்த நெய்பயிர்கள் முளைப்பதற்குள் அறுவடை செய்வதற்கான முயற்சிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து பாதிப்பு ஏற்பட்டு உள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Stories: