மயானத்துக்கு செல்லும் கொள்ளிடம் ஆற்றங்கரை சாலையை சீரமைக்க வேண்டும்

*கிராம மக்கள் கோரிக்கை

கொள்ளிடம் : மயானத்துக்கு செல்லும் கொள்ளிடம் ஆற்றங்கரை சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சோதனை சாவடியிலிருந்து கொள்ளிடம் ரயில் பாலம் அருகே ஆற்றங்கரை சாலையையொட்டி மயானம் அமைந்துள்ளது. இந்த மயானத்துக்கு கொள்ளிடம் ஆற்றங்கரை சாலை மட்டுமே பிரதான சாலையாக உள்ளது.

கொள்ளிடம் பகுதியிலுள்ள நகர் பகுதிகள், மேலவல்லம், ஆயங்குடி பள்ளம், குத்தவக்கரை, தைக்கால், தண்ணீர்பந்தல், சாமியம், சந்தப்படுகை, திட்டுபடுகை, மாங்கனாம்பட்டு உள்ளிட்ட 20 கிராமங்களில் இறந்தவர்களின் உடல்கள் இங்கு எடுத்துச் சென்றுதான் அடக்கம் செய்யப்பட்டும், எரியூட்டப்பட்டும் வருகிறது. இந்த மயானத்துக்கு பத்து மீட்டர் அருகில் கிறிஸ்தவர்களுக்கான கல்லறை அமைந்துள்ள இடமும் உள்ளது. இந்த மயானத்துக்கு செல்வதற்கு கொள்ளிடம் பகுதியிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் கடந்து செல்ல வேண்டிய கட்டாய நிலையில் உள்ளது. இந்த மயானத்துக்கு இறந்தவரின் உடல்களை வாகனத்தில் தான் எடுத்து செல்ல வேண்டிய நிலையில் இருந்து வருகிறது.

இறந்தவரின் உடலை வாகனத்தில் எடுத்துச் செல்லும் போது சாலை மிகவும் மோசமாக இருந்து வருவதால் உடலை அடக்கம் செய்ய எடுத்து செல்வதற்கு மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றது.

மேலும் இந்த சாலையின் வழியே தான் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு விவசாயிகள், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சென்று வர வேண்டும். ஆற்றங்கரையின் சாலை பல இடங்களில் உடைந்து சாலையின் அகலம் மிகவும் குறைந்து உள்ளதால் ஒரு வாகனம் செல்லும் போது எதிரே ஆட்டோ கூட வந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இந்த ஆற்றங்கரை சாலை கடந்த மழைக்காலத்தில் சாலையின் ஓரத்தில் சில இடங்களில் உடைந்த பகுதிகளில் மணல் மூட்டைகள் போட்டு நிரப்பப்பட்டன.

தற்காலிகமாக நடைபெற்ற இந்த பணி ஒரு மாதம் கூட தாக்குப்பிடிக்கவில்லை. மணல் மூட்டைகளும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. இதனால் மயானத்துக்கு செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனு அளித்தும் இதுவரை சாலையை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே 20க்கும் மேற்பட்ட கிராம மக்களின் நலன் கருதியும், பள்ளி மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் கொள்ளிடம் சிதம்பரம் சீர்காழி உள்ளிட்ட பகுதிகளுக்கு சிரமமின்றி எளிதில் வந்து செல்லும் வகையில் கொள்ளிடம் ஆற்றங்கரை சாலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆற்றின் கரையோர கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: