ரூ.5 கோடி கடன் பெற்று தருவதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஒருவர் சிக்கினார்; இருவர் தலைமறைவு

பெரம்பூர்: கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 31வது தெருவை சேர்ந்தவர் காந்திமதி. இவர், ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் விவேகானந்தர் வித்யாஷ்ரமம் கல்வி அறக்கட்டளையில் அறங்காவலராக இருந்து வருகிறார். இந்த அறக்கட்டளை மூலம் காலிமனை ஒன்றை கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் வாங்குவதற்காக வங்கியில் கடன் வாங்க முயற்சி செய்துள்ளார். அப்போது, அவருக்கு தெரிந்த கண்ணன் என்பவர் மூலம், கொளத்தூர் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் (45), ராம்குமார், ஷாஜகான் உள்ளிட்ட 3 பேரும் அறிமுகமாகியுள்ளனர். இவர்கள் 3 பேரும் தங்களுக்கு தெரிந்த தனியார் வங்கியில், ரூ.5 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி, அதற்காக பதிவாளர் துறையில் பதிவு செய்ய வேண்டும் என்று கூறி காந்திமதியிடம் இருந்து ரூ.25 லட்சத்தை பெற்றுக் கொண்டு சென்றுள்ளனர்.

அதன்பின்பு நீண்ட நாட்கள் ஆகியும் கடன் வாங்கித் தராமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து காந்திமதி 2020 ஜூலை 26ம்தேதி கொடுங்கையூர் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். நீண்ட நாட்களாக இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் காந்திமதி நீதிமன்றத்தை அணுகி தன்னை ஏமாற்றியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி நீதிமன்றத்தை நாடினார். இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிமன்றம் காந்திமதியை ஏமாற்றியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டது. அதன்படி, கொடுங்கையூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் நேற்று கொளத்தூர் பகுதியை சேர்ந்த ரவிக்குமாரை கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில், தலைமறைவான ராம்குமார், ஷாஜகான் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories: