விருதுநகரில் சீருடைப் பணியாளர் தேர்வு தொடக்கம்-பிப்.9ம் தேதி வரை நடக்கிறது

விருதுநகர் : விருதுநகரில் உள்ள கே.வி.எஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இரண்டாம் நிலைக்காவலர், சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை 2022ம் ஆண்டுக்கான உடற்தகுதி தேர்வு நேற்று தொடங்கி 9ம் தேதி வரை நடைபெறுகிறது.இதில், 689 ஆண் விண்ணப்பதாரர்களுக்கு, உடற்தகுதி தேர்வு நேற்று காலை தொடங்கியது. இதில், 400 பேர் பங்கேற்றனர். இவர்களுக்கு முதல்கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து, எடை, உயரம், மார்பளவு போன்றவை அளவிடப்பட்டது. தொடர்ந்து 1,500 மீட்டர் ஓட்டத் தேர்வும் நடைபெற்றது. எஸ்.பி. னிவாசபெருமாள் தலைமையில் உடல்தகுதி தேர்வு நடைபெற்றன. இப்பணிகளை மதுரை சரக டிஐஜி பொன்னி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து 9ம் தேதி வரை உடல் தகுதி தேர்வுகள் நடைபெறுகின்றன.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரும், விருதுநகர் தேர்வு மைய துணைக்குழுத்தலைவருமான னிவாசபெருமாள் கூறுகையில், ‘விண்ணப்பதாரர்கள் உடற்திறன் தேர்வுக்கு வருகையில், அழைப்புக் கடிதத்தையும், ஏதேனும் ஓர் அரசு அங்கீகாரம் பெற்ற புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையையும் கொண்டு வரவேண்டும். விண்ணப்பதாரர் இத்தேர்வுகளில் அரைக்கால் சட்டை, முழுகால் சட்டை மற்றும் டி சர்ட் அணிந்து கொண்டு கலந்து கொள்ள விரும்பினால், ஒரே வண்ணம் கொண்ட சர்ட் மற்றும் எவ்வித எழுத்துக்களும், முத்திரைகளும், வேறு ஏதேனும் படங்களும் இல்லாதவாறு அணிந்து வர வேண்டும்.

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தங்களது பரிசோதனை அறிக்கையினை பாதுகாவலர், மூன்றாம் நபர் மூலமாக விண்ணப்பதாரரின் அழைப்பு கடிதத்தின் நகல் மற்றும் மருத்துவ சான்றுடன் குறிப்பிட்ட தேதிகளில் தங்களது தேர்வு மைய துணைக் குழுத்தலைவரிடம் நேரடியாக வழங்க வேண்டும்.

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான உடற்தகுதி தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் கைப்பேசி மற்றும் ஸ்மார்ட் வாட்ச் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்கள் யாவும் தேர்வு மையத்திற்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் தங்களுக்கான தேர்வு மைய நுழைவுச்சீட்டை www.tnusrbonline.org. என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து தங்களுக்கான உடற்தகுதி தேர்வு தேதி மற்றும் நேரத்தையும் தெரிந்து கொண்டு, சரியான நேரத்திற்குள் தேர்வு மையத்திற்குள் தங்களது தேர்வு மைய நுழைவு சீட்டுடன் வரவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: