திருப்பதி பத்மாவதி ஓய்வு இல்லத்தில் ஆய்வு அன்னமய்யாவின் கீர்த்தனைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்

*தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி பேச்சு

திருமலை : திருப்பதி பத்மாவதி ஓய்வு இல்லத்தில் ஆய்வு மேற்கொண்ட போது அன்னமய்யாவின் கீர்த்தனைகள் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்று தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி தர்மா தெரிவித்துள்ளார். திருப்பதி பத்மாவதி ஓய்வு இல்லத்தில் அன்னமாச்சார்யா திட்டம் குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி தர்மா நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது:

 

ஏழுமலையான் மீது மிகவும் பக்தி கொண்டவர் தாலபக்க அன்னமாச்சார்யா. இவர் எழுதிய கீர்த்தனைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். இதுவரை பாடல்களாக இல்லாத சங்கீர்த்தனங்களை அர்த்தத்துடனும்,  மக்களிடம் சேர்க்க தேவஸ்தானம் சார்பில்  இணையம் தொடங்கப்பட்டுள்ளது. திருமலை நாத நீராஜன மேடையில் புதிதாக 270 சங்கீர்த்தனையின் பாடல்களை  பாடகர்கள் பாட ஏற்பாடு செய்யப்படும்.

இந்நிகழ்ச்சி எஸ்விபிசியில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.  இந்த பாடல்கள் அனைத்தையும் தேவஸ்தான இணையதளம் மற்றும் அனைத்து சமூக ஊடகங்கள் மற்றும் யூடியூப்பில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.  பாடல்களுடன், அதன் அர்த்தமும் காண்பிக்கும் விதமாக செய்யப்படும். 2ம் கட்டமாக 340 கீர்த்தனைகள் பாடல்களாக மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பொறுப்பை ஏற்றுள்ள இசையமைப்பாளர்கள் இப்பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

தேவஸ்தான கோயில்கள் மற்றும் தகவல் மையங்களில் பாடகர்களை கொண்டு ஸ்வரா பராச்சி புதிதாக பதிவு செய்த அன்னமாச்சார்யாவின் சங்கீர்த்தனங்களை பாடுவதற்கு ஆர்வமுள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்க பரிசீலிக்கப்படும்.  அனைவருக்கும் புரியும் வகையில் இதனை மக்களிடம் கொண்டு சேர்க்கும் தேவஸ்தானத்தின் முயற்சிகளுக்கு அன்னமாச்சார்யா திட்ட சங்கீர்த்தனங்கள் பங்களிக்க வேண்டும். ஆய்வின்போது எஸ்விபிசி தலைவர் சாய்கிருஷ்ணா யச்சேந்திரா, இணை செயல் அதிகாரி  சதாபார்கவி, அன்னமாச்சார்யா திட்ட இயக்குநர் விபீஷணசர்மா, ஏராளமான பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் உடனிருந்தனர்.

Related Stories: