தென்னையை தாக்கும் சிவப்பு கூன்வண்டுகளை கட்டுப்படுத்துவது எப்படி?

*வேளாண்மை அதிகாரி விளக்கம்

பூதப்பாண்டி : பூதப்பாண்டி வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:பல்வேறு வகையான பூச்சிகளின் தாக்குதலால் தென்னை மகசூல் பாதிக்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை, அகஸ்தீஸ்வரம்  வட்டாரங்களில் சிவப்பு கூன்வண்டு  கண்டாமிருக வண்டு தாக்குதல் தென்னை மரங்களில் பரவலாக காணப்படுகிறது. இவற்றில்  காண்டாமிருக வண்டானது தென்னையில் மிகுந்த சேதத்தை உண்டாக்கும் பூச்சியாகும். காண்டாமிருக வண்டானது கருமை நிறத்தில் காணப்படுவதால் கருவண்டு என்றும், இதன் தலையில் காண்டா மிருகத்தின் கொம்பு போன்ற சிறிய உறுப்பு ஒன்று காணப்படுவதால் காண்டாமிருக வண்டு எனவும் அழைக்கப்படுகிறது.

* இவ்வண்டானது நீண்ட வட்ட வடிவ வெள்ளை முட்டைகளை எருக்குழிகளிலும், அழுகிய பொருட்களில் இடும்.

* இளம்புழுக்கள் தலை பழுப்பு நிறமாகவும், உடல் பகுதியானது அழுக்கு வெள்ளை நிறத்திலும் இருக்கும். புழுக்களானது எருக்குழிகளில் காணப்படும். வண்டின் வாழ்க்கை 4 முதல் 8 மாதங்கள் வரை நீடிக்கும்.

* இவ்வண்டு  இளங்குருத்துகளை துளைத்து உட்செல்வதால் குருத்தோலை மற்றும் இளம் பூம்பாளைகள் பாதிக்கப்படுகின்றன.

*  வண்டு துளைத்து உட்சென்று விட்ட குருத்தின் துவாரத்தில் இளம் ஓலைகளின் சக்கைப் பகுதி வெளியே தள்ளப்பட்டு காணப்படும். தாக்கப்பட்ட இலை விரிந்தவுடன் விசிறி போன்று முக்கோண வடிவில் வெட்டியது போன்று காணப்படும் சிறிய வண்டுகள் தாக்கப்பட்டால் காய்ந்து விடும்.

கட்டுப்படுத்தும் முறை: இவைகளை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்றால் தாக்கப்பட்ட மடிந்த தென்னை மரங்களை வெட்டி அழிக்க வேண்டும். தோப்புகளில் குப்பை, சாணம் ஆகியவற்றை குவித்து வைக்காமல் சுத்தமாக வைக்க வேண்டும். எருக்குழிகளை வெட்டி அதனை மண்ணால் மூட வேண்டும்.எருக்குழிகளில் காணப்படும் முட்டை, புழு, கூட்டுப்புழு மற்றும் வண்டுகளை சேகரித்து அழிக்க வேண்டும். வண்டு துளைத்த துவாரங்களின் வழியே நீண்ட கம்பியை உட்செலுத்தி துவாரங்களின் வழியே உட்சென்று விட்ட வண்டினை கம்பியால் குத்தி வெளியே எடுக்க வேண்டும்.

இரண்டாம் மற்றும் மூன்றாம் இலை இடுக்குகளில் வேப்பங்கொட்டை தூள் மணல்  சமபங்கு கலவையை இளம் மரம் ஒன்றுக்கு 150 கிராம் என்ற அளவில் அடிக்குருத்திலிருந்து மூன்றாவது குருத்தின் வழியாக இட வேண்டும். மின் விளக்கு பொறிகளை வைத்து அதன் வெளிச்சத்திற்கு கீழே விழுகின்ற ஆண், பெண் வண்டுகளை கவர்ந்து அழிக்க வேண்டும்.

பூஞ்சாணம் தெளித்து அழிக்கலாம்: ஆமணக்கு பிண்ணாக்கு இரண்டரை கிலோ ஈஸ்ட் 5 கிராம் அல்லது அசிடிக் அமிலம் 5 மிலி கலவையில் நீளவாக்கில் வெட்டப்பட்ட இளம் இலைமட்டைத் துண்டுகளை நனைத்து ஏக்கருக்கு 30 வீதம் தோப்பில் வைத்து வண்டுகளை கவர்ந்து அழிக்கவும்.  எருக்குழியில் வளர்ந்து வரும் புழுக்களை அழிக்க மெட்டாரை சியம்  என்ற பூஞ்சாணத்தை தெளித்து அழிக்க வேண்டும்.

ஹெக்டருக்கு ஒன்று என்றளவில் ரைனோலூர் என்ற இனக்கவர்ச்சி பொறியை உபயோகித்து இவ்வண்டுகளை எளிதாக கவர்ந்து அழிக்கலாம். காண்டாமிருக வண்டின் வாயில் பேக்குலோ வைரஸ் ஒரைகடஸ் என்ற வைரஸை ஊசிமூலம் செலுத்தி 15 வண்டுகள்  1 ஹெ என்ற அளவில் தென்னந்தோப்பில் விட்டால் அது மற்ற வண்டுகளுடன் கலந்து நோயினைப் பரப்பி அவற்றை அழிக்கின்றது.

 தென்னை மரங்களில் தாக்கும் பூச்சிகளில் அதிகம் பொருளாதார  சேதத்தை ஏற்படுத்துவது சிகப்பு கூன்வண்டுகள் ஆகும்.  இவ்வண்டின் தாக்குதலை கவனிக்கா விட்டால்  மரம் முற்றிலும் அழிந்து விடும். இவ் வண்டானது மரங்களில் துவாரத்தை ஏற்படுத்தி தண்டின் நடுப்பகுதியில் சோற்றுப் பகுதியை தின்று வேகமாக வளர்கின்றன. மரத்தின் துவாரத்தின் வழியே திசுக்களை தின்ற பின் வெளியே தள்ளப்பட்ட  மரம் நார் போன்று காணப்படும் மற்றும் துவாரத்தின் வழியே சிகப்பு நீர் வடிந்து காய்ந்த பிசின்  காணப்படும்.

பலமற்ற மரத்தின் கொண்டைப் பகுதி சிவப்பு கூன்வண்டு தாக்குதலால் எளிதில் முறிந்து விடும். இதன் புழுக்கள் மஞ்சள் நிறத்துடன் கால்கள் அற்று காணப்படும். மரங்களில் நுனிப்பகுதியை குறிப்பிட்ட கால இடைவெளியில் சுத்தம் செய்ய வேண்டும். அருகில் இருக்கும் மற்ற மரங்கள்   பாதிக்கப்படாமல் இருக்க வண்டு தாக்கிய மரங்களை வெட்டி அளிக்க வேண்டும்.  தண்டுப் பாகத்தில் உள்ள ஓலைகளை முழுவதும் வெட்டுவதால் சிவப்பு கூன் வண்டுகள் முட்டையிட எளிதாகிறது.

இதை தடுக்க பச்சை ஓலைகளை வெட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.  தேவைப்பட்டால் தண்டிலிருந்து 2 அடி விட்டு ஓலைகளை வெட்டுவதால் புழுக்கள் எளிதில் துளையிட்டு  உட் செல்வதை தடுக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வேர் மூலம் மருந்து

சிவப்பு கூன் வண்டுகளால் பாதிக்கப்பட்ட மரங்களில் இருக்கும் துவாரங்களில் உயரமாக உள்ள துவாரத்தை தேர்வு செய்து மற்ற துவாரங்களை தார்  அல்லது சிமெண்ட்  வைத்து அடைத்து விட்டு தேர்வு செய்த  துவாரத்தை 10% மாலத்தியான் தூள் மற்றும் களிமண் கலந்த கலவையை 1:1  என்ற விகிதத்தில் தயார் செய்து அடைத்து விடவேண்டும். தொண்டைப் பகுதியில் இவ் வண்டின் தாக்குதல் இருப்பின்  பூச்சிக்கொல்லி கரைசலை ஊற்ற வேண்டும். அதிகம் பாதிக்கப்பட்ட மரங்களில் ஊடுருவி பாயும் பூச்சி கொல்லி  மருந்தை 10 மில்லி மருந்துக்கு 10 மில்லி நீருடன் கலந்து வேர் மூலமாக 45 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை செலுத்த வேண்டும்.  மருந்து செலுத்திய பிறகு 45 நாட்கள் கழித்து தென்னை காய்களை அறுவடை செய்ய வேண்டும்.

கவர்ச்சி பொறி

சிவப்பு கூன் வண்டுகளை கட்டுப்படுத்த கரும்புச்சாறு இரண்டரை லிட்டர், ஈஸ்ட் மாத்திரை 5 கிராம், 5 மில்லி வினிகர் ஆகிய கலவையுடன் நீளவாக்கில் வெட்டப்பட்ட ஒலை மட்டை  துண்டுகள் கலந்த பானையை ஏக்கருக்கு 30 வீதம் தென்னந்தோப்பில் ஆங்காங்கே வைத்து சிகப்பு கூன் வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம் மற்றும் இனக்கவர்ச்சிப் பொறியான  பெரோலூர் ஹெக்டருக்கு 1 எண்  வைத்தும் இவற்றை  அழிக்கலாம். மெட்டாரைசிய பவுடர் மற்றும் இனக்கவர்ச்சி பொறி  வேளாண்மை விரி  வாக்க மையங்களில் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.

Related Stories: