எங்கு சென்றாலும் பணம் கேட்கின்றனர் கல்வி உதவி தொகை கேட்டு கலெக்டர் கார் முன் அமர்ந்து பெண் தர்ணா-கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

கரூர் : எங்கு சென்றாலும் பணம் கேட்கின்றனர். மகனின் கல்வி உதவித்தொகையை தர வலியுறுத்தி, விதவை பெண் ஒருவர் கலெக்டர் கார் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதோடு திடீரென அலறல் சத்தம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்டம் முழுவதில் இருந்து வந்த பொதுமக்களிடம் இருந்து கலெக்டர் பிரபு சங்கர் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

பின்னர் மதியம் 1.30 மணியளவில் கூட்டத்தை முடித்து விட்டு கலெக்டர் வேறொரு கூட்டத்திற்கு சென்று விட்டார். அப்போது மனு கொடுக்க வந்த 45வயதான பெண் ஒருவர், கலெக்டர் அலுவலக போர்டிகோவில் நிறுத்தப்பட்டிருந்த கலெக்டர் கார் முன்பு அமர்ந்து திடீரென அலறல் சத்தம் போட ஆரம்பித்ததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை பார்த்த பாதுகாப்பு போலீசார், ஓடி வந்து அந்த பெண்ணுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தனர்.

பின்னர் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டதில், கரூர், புன்னம் சத்திரம் பெரிய ரெங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த உமாமகேஸ்வரி(46) என்பதும், கலப்பு திருமணம் செய்து கொண்ட, தனக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கணவர் 2020ல் இறந்து விட்டார். இதய வால்வு பிரச்னை காரணமாக ஆப்ரேஷன் செய்துள்ளதால் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் சிரமப்படுகிறேன். ஆதரவற்ற விதவை சான்று கொண்டு வாருங்கள் அங்கன்வாடியில் உதவியாளர் வேலை தருகிறேன் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். எனது பெரிய மகனுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கப்பட வேண்டிய கல்வி உதவித்தொகை ரூ.68 ஆயிரம் வந்துள்ளது. அதனை நேரில் வாதருகிறேன் எனக் கூறுகின்றனர்.

இங்கு வந்தால், அந்த மாதிரி ஸ்கீமே இல்லை எனக் கூறுகின்றனர். பேங்கில் அக்கவுண்ட் துவங்க சொன்னார்கள். அவ்வாறு கொண்டு வந்தாலும், பேப்பர் போன்ற நோட்டுதான் தருகின்றனர். எங்கு சென்றாலும் பணம் கேட்குகின்றனர். என் நிலை குறித்து எங்கள் ஊருக்கு வந்து விசாரித்து பார்த்துக் கொள்ளுங்கள். நல்ல கலெக்டர் வந்துள்ளார். இந்த முறை அவரிடம் சென்று மனு கொடுத்தால் நிச்சயம் நல்லது நடக்கும் எனக் ஊர்க்காரர்கள் கூறினார்கள். அதுதான் மனுவுடன் வந்தேன் என போலீசாரிடம் அழுதவாறே அந்த பெண் தெரிவித்தார். இதனையடுத்து, அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், ஆறுதல் கூறி திரும்பவும் மனு கொடுக்க சொல்லி அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், உமாமகேஸ்வரி, மாவட்ட கலெக்டருக்கு வழங்குவதற்காக கொண்டு வந்த மனுவில், நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். எனது கணவர் 2020ல் இறந்து விட்டார். எனக்கு 2 ஆண் மகன்கள் உள்ளனர். எனக்கு வால்வு குழாய் அடைப்பு ஆப்பரேஷன் செய்துள்ளேன். எந்த வேலையும் செய்ய முடியாது. எனது 2 வது மகன் ஹரிபிரசாத், நொய்யல் அரசு பள்ளியில் 8ம் வகுப்பில் இருந்து தற்போது 10ம் வகுப்பு வரை பயின்று வருகிறார். இதுவரை 3 ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை வரவில்லை. நாங்கள் இருவரும் கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள். எனக்கு உதவிட யாரும் இல்லை.

நான் ஆதரவற்ற விதவை. 8ம் வகுப்பு வரை படித்துள்ளேன். எனக்கு அரசு வேலை போட்டுத் தர வேண்டும். நான் பலமுறை மனு கொடுத்தும், இதுவரை நடவடிக்கை இல்லை, இது குறித்து உடனே நடவடிக்கை எடுதது எனது 2வது மகனுக்கு கல்வி உதவித்தொகையும், வீடு கட்ட இலவச வீட்டு மனையும், அரசு மூலம் வேலையும் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என மனுவில் தெரிவித்துள்ளார்.

Related Stories: