அதானி குழும முறைகேடு விவகாரம் மீண்டும் முடங்கியது நாடாளுமன்றம்: இரு அவையிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளி

புதுடெல்லி: பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் மீதான மோசடி குற்றச்சாட்டு குறித்து விவாதம் நடத்தக் கோரி, இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், மீண்டும் நாடாளுமன்றம் எந்த அலுவலும் நடைபெறாமல் முடங்கியது. தொழிலதிபர் கவுதம் அதானியின் அதானி குழும நிறுவனங்கள் பங்குச்சந்தையில் தனது பங்கு மதிப்புகளை மோசடியாக உயர்த்தி, வரலாறு காணாத முறைகேட்டில் ஈடுபட்டதாக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் சமீபத்தில் குற்றம்சாட்டியது. இதனால் அதானி குழும பங்குகள் வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில், அந்நிறுவனத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளதால், இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதி கண்காணிப்பு விசாரணை நடத்தக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டுமென்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், கடந்த வாரத்தில் தொடர்ந்து 2 நாட்கள் இரு அவைகளும் முடங்கின.இந்நிலையில், வார விடுமுறை முடிந்து, நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று மீண்டும் கூடியது. காலையில் மக்களவை கூடியதும், அதானி குழும விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையின் மையப்பகுதியை முற்றுகையிட்டு ‘அதானி அரசே வெட்கக்கேடு’ என கோஷமிட்டனர். இதனால், அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அமளி காரணமாக அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இதே போல, மாநிலங்களவையில் விதி 267ன் கீழ் ஒத்திவைப்பு நோட்டீசை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திமுக எம்பி திருச்சி சிவா உள்ளிட்ட 10 எம்பிக்கள் கொடுத்திருந்தனர். ஆனால், அவற்றை அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் நிராகரித்ததால் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.  

Related Stories: