ரயிலில் 10 கிலோ கஞ்சா கடத்தி வந்தவர் கைது

சென்னை: சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையம் வழியாக கஞ்சா கடத்தி வருவதாக அடையாறு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, நேற்று அதிகாலை சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பையுடன் வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று இருந்ததை பார்த்த போலீசார், அந்த வாலிபரை பிடித்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அப்போது, அதில் 10.8 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.  அதில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள ஒரகடம் காந்தி தெருவை சேர்ந்த ஆகாஷ் (26) என்றும், பிரபல கஞ்சா வியாபாரியான இவர், அசாம் மாநிலத்திற்கு சென்று அங்கு கஞ்சா வாங்கிக்கொண்டு ரயில் மூலம் சென்னை வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் ஆகாஷை கைது செய்தனர். அவரிடம் இருந்து 10.8 கிலோ கஞ்சா மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories: