தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட மேற்கு ஆப்பிரிக்க குரங்கு குட்டிகள் பிடிபட்டன: சென்னை விமானநிலையத்தில் ஒருவர் கைது

சென்னை: தாய்லாந்திலிருந்து சென்னைக்கு, விமானத்தில் கடத்திவந்த 2 மேற்கு ஆப்பிரிக்க குரங்கு குட்டிகளை திருப்பி அனுப்பினர். தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து ஏர் ஏசியா பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு, நேற்று முன்தினம்  நள்ளிரவில் வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 32 வயது ஆண் பயணி  ஒருவர், தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா பயணியாக போய்விட்டு வந்திரந்தார். அவர் கொண்டு வந்த 2 பிளாஸ்டிக் கூடைகளை சுங்க  அதிகாரிகள் சோதனை செய்தனர்.

ஆனால் அவர் வைத்திருந்த 2 பிளாஸ்டிக் கூடைகளில், 2 குரங்கு குட்டிகள் இருந்தது. மேற்கு ஆப்பிரிக்க வனப்பகுதியில், அடர்ந்த காட்டுப் பகுதியில் வசிக்கக்கூடிய சூட்டி மங்காவே  மற்றும் காலர்டு மங்காவே என்ற 2 ஆப்பிரிக்கா வகை குரங்கு குட்டிகள், அவர் வைத்திருந்த கூடைகளுக்குள் இருந்தன. இதை அடுத்து சுங்க  அதிகாரிகள் அவரை வெளியில் விடாமல் சுங்க அலுவலகத்தில் ஒரு அறையில் அடைத்து வைத்தனர். அதோடு, ஒன்றிய வன உயிரின குற்றப்பிரிவுக்கு தகவல் கொடுத்தனர். அங்கிருந்து அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர்.

இந்த ஆப்பிரிக்க வகை குரங்குகள் மிகவும் ஆபத்தானவை. இவைகள்  நோய்க் கிருமிகள் நிறைந்த வகைகள். இந்த வகை குரங்குகளை இந்தியாவுக்குள் கொண்டு வருவதற்கு, அனுமதியே கிடையாது. மேலும் இந்த பயணி முறையான எந்த அனுமதியும் இல்லாமல், இந்த 2 குரங்குகளையும் சட்டவிரோதமாக கடத்திக் கொண்டு வந்தது தெரியவந்தது. இதை அடுத்து இந்த குரங்குகளை கடத்தி வந்த அந்தப் பயணியை சுங்க அதிகாரிகளும், ஒன்றிய வனவிலங்கு குற்றப்பிரிவு அதிகாரிகளும் இணைந்து கைது செய்தனர். அதோடு அந்த 2 குரங்குகளையும், மீண்டும் தாய்லாந்து நாட்டுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளனர். அதற்கான செலவுகளை, இந்த குரங்குகளை சட்ட விரோதமாக கடத்தி வந்த கடத்தல் பயணியிடம், வசூலிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

Related Stories: