கூடலூர் அருகே பழங்குடியின கிராமத்திற்குள் வெள்ளம் புகுவதை தடுக்க ரூ.48 லட்சத்தில் தடுப்புசுவர்

ஊட்டி : கூடலூர் அருகே பழங்குடியின கிராமத்திற்குள் வெள்ளம் புகுவதை  தடுக்க ஆற்றங்கரையில் ரூ.48 லட்சத்தில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டு  வருகிறது.

 நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் ஜூன்  மாதம் முதல் நவம்பர் மாதம் வரை தொடர்ந்து தென்மேற்கு மற்றும் வடகிழக்கு  பருவமழைகள் பெய்கின்றன. கடந்த 3 ஆண்டுகளாக கனமழை பெய்யும் சமயத்தில்  கூடலூர் பகுதியில் உள்ள ஆதிவாசி கிராமங்கள், விவசாய நிலங்களுக்குள் வெள்ளம்  புகுந்து சேதத்தை விளைவிக்கிறது. கூடலூரில் காளம்புழா, புரமண வயல்  பகுதியில் 100க்கும் மேற்பட்ட ஆதிவாசி மக்களின் குடியிருப்புகள் உள்ளது.  

இக்கிராமங்கள் வழியாக பாண்டியாறு ஆறுக்கு செல்லும் நீரோடை செல்கிறது. கனமழை  பெய்யும்போது வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆதிவாசி மக்களின்  வீடுகளுக்குள் தண்ணீர் புகுவது வாடிக்கையாக இருந்து வந்தது. இதனால்  வீடுகள், உடமைகள் சேதமடைந்தது. இதை தடுக்க ஆற்று வாய்க்காலை அகலப்படுத்தும்  பணி நடைபெற்றது. இருப்பினும் இடைவிடாது மழை பெய்யும் சமயத்தில் ஊருக்குள்  தண்ணீர் புகுவது தொடர்ந்தது.

கடந்த 2 ஆண்டுகளில் ஜூலை, ஆகஸ்ட்  மாதங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து ஆற்றின் கரையோர பகுதிகளும் சேதம்  அடைந்தது. இதனால் ஊருக்குள் வெள்ளநீர் புகுந்து சேதம் விளைவிப்பதை தடுக்க  மாவட்ட கலெக்டர் அம்ரித் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

தொடர்ந்து  பொதுப்பணித்துறை (நீர்வளம்) மூலம் ரூ.48 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.  தற்போது ஆற்றின் கரையோரம் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் தொடங்கி  நடைபெற்று வருகிறது. மேலும் மழை மற்றும் கோடை காலத்தில் ஆற்று நீரை  பயன்படுத்தும் வகையில் வாய்க்கால் கரையோரம் படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டு  வருகிறது. இதனால் ஆதிவாசி மக்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். மேலும்  மழைக்காலத்தில் நிலவி வந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு உள்ளதாக நிம்மதி  தெரிவித்து உள்ளனர்.

Related Stories: