புதுவை விடுதியில் லேப்டாப், பணம் திருடிய ஊழியர் சிதம்பரத்தில் கைது

புதுச்சேரி : புதுவை நைனார்மண்டபம் காவேரி வீதியை சேர்ந்தவர் பிரவீன்குமார் (36). இவர் புதுவை 100 அடி சாலையில் உள்ள ஒரு விடுதியை கடந்த 6 மாதமாக குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இவரிடம் திருப்பூர் ஆத்துப்பாளையம் திருமுருகன்பூண்டி அம்பேத்கர் நகரை சேர்ந்த முகமது யாசின்(35) என்பவர் கடந்த 3 மாதமாக ரூம் பாயாக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 25ம் தேதி பிரவீன்குமாரின் லேப்டாப், ரூ.5 ஆயிரம் பணம், செல்போன் மற்றும் பாரில் காசாளராக வேலை செய்து வந்த அரவிந்த் என்பவரின் பைக் ஆகியவற்றை முகமது யாசின் எடுத்துக் கொண்டு சென்று விட்டார். பல இடங்களில் அவரை தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து பிரவீன்குமார் புகார் அளித்தார். அதன்பேரில் உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் சீனியர் எஸ்பி, எஸ்பி (கிழக்கு) ஆகியோர் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையில் தனிப்படை அமைத்து முகமது யாசினை தேடி வந்தனர். போலீசார் அவரது சொந்த ஊரான திருப்பூருக்கு சென்று பார்த்தபோது, அங்கு அவர் வரவில்லை என்பது தெரியவந்தது.

தொடர்ந்து, முகமது யாசினின் நண்பர்களை போலீசார் கண்காணித்து வந்தனர். அப்போது அவரது நண்பர் ஒருவருக்கு முகமது யாசின் போன் செய்து, போலீசார் யாராவது தன்னை தேடி வந்தார்களா என்று கேட்டுள்ளார். பின்னர், அவர் பேசிய செல்போன் எண் மூலமாக முகமது யாசின் சிதம்பரம் அம்மாபேட்டை புத்துகோயில் தெருவில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, உருளையன்பேட்டை தலைமை காவலர் சிவசுப்ரமணியன், கிரைம் காவலர்கள் செல்லதுரை, மணிகண்டன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு சிதம்பரம் சென்று அங்கு பதுங்கி இருந்த முகமது யாசினை கைது செய்து புதுவைக்கு அழைத்து வந்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும், அவரிடமிருந்து லேப்டாப், செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த உருளையன்பேட்டை போலீசாரை சீனியர் எஸ்பி தீபிகா, எஸ்பி (கிழக்கு) ஸ்வாதி சிங் ஆகியோர் பாராட்டினர்.

Related Stories: