சென்ட்ரல் ரயில் நிலையத்தில்12 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது

தண்டையார்பேட்டை: வெளிமாநிலத்தில் இருந்து விரைவு ரயில் மூலம் கஞ்சா கடத்திய வாலிபரை  கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வருவதாக ரயில்வே போலீசாருக்கு ரகசிய  தகவல் கிடைத்தது. அதன்படி டிஎஸ்பி முத்துக்குமார் மற்றும் ஆய்வாளர் சசிகலா ஆகியோர் தலைமையில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீசார் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது, 10வது நடைமேடையில் தன்பாத் விரைவு ரயிலில் வந்த பயணிகளை கண்காணித்தனர். சந்தேகப்படும்படி வந்தவரை மடக்கி அவரது பையை சோதனை செய்தனர்.

அதில் 12 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவர் சென்னை மயிலாப்பூரை சேர்ந்த விஜயகுமார் (22) என்பது தெரிந்தது. இதையடுத்து, அவரிடமிருந்து 6 பொட்டலங்களில் இருந்த 12 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை ஜார்ஜ்டவுன்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், கஞ்சா கடத்தல் கும்பலுக்கும், இவருக்கும் தொடர்பு உள்ளதா, என ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories: