அரசு வேலை வாங்கி தருவதாக கூறியவரை நம்பி ரூ.3 லட்சத்தை பறிகொடுத்த தகராறு இளம்பெண் தற்கொலை முயற்சி: போலீசார் விசாரணை

தண்டையார்பேட்டை: காசிமேடு ஜீவரத்தினம் நகர் பகுதியை சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி பவானி (22). கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பவானியின் தந்தை மூலம் லோகேஷ் என்பவர் முரளிக்கு அறிமுகமாகியுள்ளார். இவர், தனக்கு மின்சார வாரியத்தில் அதிகாரிகளை தெரியும். அதை வைத்து உங்களுக்கு மின்வாரியத்தில் வேலை வாங்கி தருகிறேன், என முரளியிடம் கூறியுள்ளார்.

மேலும், இதற்காக ரூ.3 லட்சம் கேட்டுள்ளார். இதை நம்பிய முரளி, பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் பலமாதங்களாக வேலை வாங்கி கொடுக்காமல் லோகேஷ் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த  முரளி, எனக்கு வேலை வேண்டாம், நான் கொடுத்த பணத்தை திரும்பி தந்துவிடுங்கள் என லோகேஷிடம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக முரளிக்கும், அவரது மனைவி பவானிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வழக்கம்போல் நேற்று முன்தினம்  இரவும் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பவானி, வீட்டில் இருந்த கொசு மருந்தை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து முரளியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: