பாதுகாப்பு ஆலோசகர்கள் பேச்சுவார்த்தையில் ரிஷி சுனக் பங்கேற்பு

லண்டன்: இந்தியா-இங்கிலாந்து இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இருநாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்திய பிரதிநிதிகள் குழுவுடன் அமெரிக்கா சென்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அங்கு அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனை சந்தித்து இரு தரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து கலந்து ஆலோசித்தார். பின்னர், அங்கிருந்து இங்கிலாந்து சென்ற அவர் லண்டனில் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர் டிம் பாரோவ் உடன் இருதரப்பு உறவை மேம்படுத்துவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போது, இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

லண்டனில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் அதன் அதிகாரப்பூர்வ டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், ``இந்தியா இங்கிலாந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பு குறித்த பேச்சுவார்த்தை நடந்த போது அதில் பிரதமர் ரிஷி சுனக் கலந்துகொண்டார். சர் டிம் பாரோவ் இந்திய வரும் போது வர்த்தகம், பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில்  இரு தரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த முழு ஆதரவு அளிப்பதாக ரிஷி சுனக் உறுதி அளித்திருக்கிறது,’’ என்று கூறப்பட்டுள்ளது. இந்தியா-இங்கிலாந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்திலான இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Related Stories: