ரஞ்சி கோப்பை கிரிக்கெட்; அரையிறுதியில் சவுராஷ்டிரா

ராஜ்கோட்: ரஞ்சி கோப்பை காலிறுதியில் பஞ்சாப் அணியை 71 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய சவுராஷ்டிரா, கடைசி அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது.

நடப்பு சீசனின் 4 காலிறுதி ஆட்டங்கள்  ஜன.31ம் தேதி தொடங்கி நடந்து வந்த நிலையில், 4வது நாளான நேற்று முன்தினமே  ஆட்டத்தை முடித்த 3 அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்து விட்டன. ஜார்க்கண்ட் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற  பெங்கால், ஆந்திராவை 5 விக்கெட் வித்தியாசத்தில் சாய்த்த மத்திய பிரதேசம்,  உத்தரகாண்ட் அணியை இன்னிங்ஸ் மற்றும் 281 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய கர்நாடகம் என 3 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

சவுராஷ்டிரா-பஞ்சாப் அணிகள் மோதிய காலிறுதி ஆட்டம் கடைசி நாளான நேற்று வரை நீடித்தது.

முதல் இன்னிங்சில் சவுராஷ்டிரா  303, பஞ்சாப்  431 ரன் எடுத்தன. 128 ரன்  பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளயைாடிய சவுராஷ்டிரா  379 ரன் குவித்து ஆட்டமிழந்தது. கேப்டன் அர்பித், சிராக் ஜனி தலா 77 ரன், பிரேரக் மன்கட் 88, பார்த் பட் 51 ரன் விளாசினர். இதைத் தொடர்ந்து 252 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய பஞ்சாப், 4ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 52 ரன் எடுத்திருந்தது. கை வசம் 8 விக்கெட், 90 ஓவர் இருந்ததால் பஞ்சாப் எஞ்சிய 200 ரன்னை எளிதில் எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. புக்ராஜ் 17, சித்தார்த் கவுல் 2 ரன்னுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர். சித்தார்த் 10 ரன்னில் வெளியேற... புக்ராஜ் 42 ரன், கேப்டன் மன்தீப் 45, அன்மோல்பிரீத் சிங் 26 ரன் எடுத்தனர்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அணிவகுக்க, பஞ்சாப் அணி 89.1 ஓவரில்  180 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. சவுராஷ்டிரா பந்துவீச்சில் பார்த் பட் 5, தர்மேந்திர சிங் ஜடேஜா 3, யுவ்ராஜ்சிங் டோடியா 2 விக்கெட் கைப்பற்றினர். 71 ரன் வித்தியாசத்தில் வென்ற சவுராஷ்டிரா அரையிறுதிக்கு முன்னேறியது.

அரையிறுதி ஆட்டங்கள்  பிப்.8-12 வரை நடைபெறும். இந்தூரில் நடக்கும் முதல் அரையிறுதியில்  பெங்கால் - மத்திய பிரதேசம், பெங்களூருவில் நடக்கும் 2வது அரையிறுதியில்  சவுராஷ்டிரா - கர்நாடகா அணிகளும் மோதுகின்றன. இவற்றில் வெற்றி பெறும் அணிகள்  பிப்.16ம் தேதி தொடங்கும் இறுதிப் போட்டியில் மோதும். நடப்பு சாம்பியன் மத்திய பிரதேசம்  உட்பட  அரையிறுதியில் களம் காணும் 4 அணிகளும் முன்னாள் சாம்பியன்கள்தான். 4 அணிகளும் பல முறை ரஞ்சிக் கோப்பையை வென்றுள்ளன.

Related Stories: