சேலத்தில் நள்ளிரவில் காதலியுடன் நெருக்கமான சந்திப்பு 50 அடி உயர மாடியில் இருந்து குதித்த சட்ட கல்லூரி மாணவர் பலி

சேலம்: சேலத்தில் நள்ளிரவில் காதலியுடன் நெருக்கமாக இருந்த சட்ட கல்லூரி மாணவர், திடீரென காதலியின் தாய் அங்கு வந்ததால், தப்பிப்பதற்காக 50 அடி உயர மாடியில் இருந்து குதித்தபோது பலியானார். தர்மபுரி மாவட்டம், வெண்ணாம்பட்டி ரோடு காமராஜர் நகரைச் சேர்ந்தவர் சரவணன். அரசு வங்கியில் சீனியர் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியும், வங்கி மேலாளராக வேலை செய்து வருகிறார். இவர்களது மகன் சஞ்சய் (18), சேலத்தில் உள்ள தனியார் சட்டக்கல்லூரியில் பி.ஏ., எல்.எல்.பி. முதலாமாண்டு படித்து வந்தார். இவர் கல்லூரி அருகே சின்னக்கொல்லப்பட்டியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருந்தார்.

உடன் படிக்கும் 18 வயதான சக மாணவியை காதலித்துள்ளார். அந்த பெண்ணும் சின்னகொல்லப்பட்டியில், தாயுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். மாணவியும், சஞ்சயும் கரூர் தனியார் பள்ளியில் ஒன்றாக படித்த போதிருந்தே கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். சட்டக்கல்லூரியிலும் ஒன்றாக சேர்ந்தனர். காதலியின் வீட்டின் மொட்டை மாடியில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில், சஞ்சய் காதலியை மொட்டை மாடியில் சந்தித்துள்ளார். அப்போது இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். அந்த நேரத்தில் விழித்த அந்த பெண்ணின் தாய், மகளை காணாமல், மொட்டை மாடிக்கு தேடி வந்துள்ளார்.

அப்போது, மகளுடன் வாலிபர் ஒருவர் நெருக்கமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்த நேரத்தில் அவரை எதிர்பார்க்காத காதலர்களும் பதற்றமடைந்தனர். இதனால் சஞ்சய், அந்த இடத்தில் இருந்து தப்பிப்பதற்காக, 50 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்தார். தாயும் மகளும் உடனடியாக கீழே இறங்கி வந்து பார்த்தனர். அங்கு தலையில் அடிபட்டு, நிர்வாண நிலையில் சஞ்சய் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். தகவலறிந்து கன்னங்குறிச்சி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில், அந்த பெண்ணை தீவிரமாக காதலித்து வந்த சஞ்சய், நெஞ்சில் காதலியின் பெயரை பச்சை குத்தியிருப்பதும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து, மாணவர் இறப்புக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என விசாரித்து வருகின்றனர்.

Related Stories: