நாளை தைப்பூசத் திருவிழா: திருச்செந்தூரில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

திருச்செந்தூர்: நாளை தைப்பூசத் திருவிழாவையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். முருகப் பெருமானின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தைப்பூசத் திருவிழா நாளை (ஞாயிறு) நடக்கிறது. இதையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நாளை அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிசேகம், காலை 4.30 மணிக்கு தீர்த்தவாரி ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அதன் பின்னர் காலை 10.30 மணிக்கு உச்சிக்கால அபிசேகம், நண்பகல் 12 மணிக்கு உச்சிக்கால தீபாராதனை, மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 6 மணிக்கு ராக்கால அபிசேகம், இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, 8 மணிக்கு பள்ளியறை தீபாராதனை, அதன்பின்னர் கோயில் திருக்காப்பிடுதல் ஆகியவை நடைபெறும்.

மதியம் உச்சிக்கால தீபாராதனைக்கு பின்னர் சுவாமி அலைவாயுகந்த பெருமான், வடக்கு ரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்திற்கு எழுந்தருளுவார். அங்கு சுவாமிக்கு அபிசேகம், அலங்காரம் நடைபெறும். சுவாமி தனித் தங்க மயில்வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து, பக்தர்களுக்கு காட்சியளித்தவாறு திருக்கோயில் சேர்கிறார். தைப்பூசத் திருவிழாவில் பங்கேற்ற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் மாலை அணிந்து, விரதமிருந்து, பக்தி பாடல்கள் பாடியும், வேல்குத்தியும், காவடி எடுத்தும், நேர்த்திக் கடன் செலுத்த பல்லாயிரக்கணக்கில் குவிந்த வண்ணம் உள்ளனர். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலிருந்து குழந்தைகள் முருகன் வேடமிட்டும், முருகன் உருவம் பொறித்த படங்கள், சிலைகளுடன் அலங்கரிக்கப்பட்ட வாகன ரதங்களில் வந்த வண்ணம் இருந்தனர்.

திருவிழாவையொட்டி கோயிலின் அனைத்து ரத வீதிகளிலும் பச்சை ஆடை அணிந்த பக்தர்களின் தலைகளாகவே காட்சியளித்தது. ஆட்டோக்கள், வேன்கள், டூரிஸ்ட் பஸ்கள், கார்கள் என வாகனங்கள் கோயிலை நோக்கி படையெடுத்ததால் கடும் போக்குவரத்து நெருக்கடி காணப்பட்டது.

தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் திருச்செந்தூர் டிஎஸ்பி ஆவுடையப்பன் தலைமையில் இன்ஸ்பெக்டர் முரளிதரன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சண்முகர் மீட்கப்பட்ட நாள் கடைப்பிடிப்பு

இந்தியாவில் ஆதிக்கம் செலுத்திய டச்சுக்காரர்களால் கி.பி. 368ம் ஆண்டு கடல் வழியாக சண்முகர், நடராஜர் சிலைகள் கடத்திச் செல்லப்பட்ட போது, கடும் புயல் காரணமாக பயத்தில் அந்த சிலைகளை கடலில் வீசிச் சென்றனர். இதுகுறித்து, முருகபக்தர் வடமலையப்பன் கனவில் முருகப்பெருமான் வெளிப்படுத்தினார். இதையடுத்து பக்தர்களால் சிலை மீட்கப்பட்ட நாளை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும், சண்முகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. அதன்படி, நேற்று நடந்த சிறப்பு பூஜைக்குப் பின் மாலையில் சுவாமி அலைவாயு கந்த பெருமான், தங்கச் சப்பரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Related Stories: