மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் கோலாகலமாக நடந்தது தெப்பத்திருவிழா: பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

மதுரை: தைப்பூசத்தை முன்னிட்டு வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் இன்று காலை கோலாகலமாக தெப்பத்திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா ஜன.24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 10ம் நாளான நேற்று முன்தினம் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடந்தது. 11ம் நாளான நேற்று சிந்தாமணியில் கதிரறுப்பு திருவிழா நடந்தது.

இன்று தெப்ப உற்சவம் நடந்தது. இதையொட்டி, அதிகாலை 5 மணியளவில் மீனாட்சியம்மன், பிரியாவிடை சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் கோயிலில் இருந்து புறப்பாடாகி வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தின் கரையில் உள்ள முக்தீஸ்வரர் கோயிலுக்கு சென்றடைந்தனர். பின்னர் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் காலை 10.35 மணிக்கு சுவாமியும், அம்மனும் எழுந்தருளனர். கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க 2 முறை தெப்பக்குளத்தை சுற்றி வந்தனர். பக்தி பரவசத்துடன் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பின்னர் மாலையில் தெப்பக்குளம் மைய மண்டபத்தில் எழுந்தருளி பத்தி உலாத்தி தீபாராதனை முடிந்த பின்பு, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி ஒரு முறை தெப்பத்தை அம்மனும், சுவாமியும் சுற்றி வருவர். அதன் பின்பு அங்கிருந்து புறப்பாடாகி கோயிலை வந்தடைவர். தெப்பத்திருவிழா முடிந்து சுவாமியும், அம்மனும் கோயிலுக்கு திரும்பி வரும் வரை மீனாட்சியம்மன் கோயிலில் நடை சாத்தப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தெப்பத்திருவிழாவையொட்டி நகரில் இன்று போக்குவரத்து மாற்றப்பட்டிருந்தது.

Related Stories: