காற்றில் கலந்த கான மேகம்: 'ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி'என புகழப்படும் பாடகி வாணி ஜெயராம் காலமானார்..!

சென்னை: மூத்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78) சென்னையில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் நெற்றியில் காயங்களுடன் வாணி ஜெயராம் இறந்து கிடந்தார். படுக்கை அறையில், கீழே விழுந்து நெற்றியில் அடிபட்டு உயிரிழந்ததாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 1945-ம் ஆண்டில் வேலூரில் பிறந்த வாணி ஜெயராம்-ன் இயற்பெயர் கலைவாணி. வங்கி ஊழியராக பணியாற்றிய வாணி ஜெயராம், வேலை மாற்றம் காரணமாக மும்பை சென்றபோது, அவரின் திறமையை அடையாளம் கண்டது இந்தி திரையுலகம்.

1971ம் ஆண்டு முதல் திரையுலகில் இருந்த வாணி ஜெயராம் 10,000க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட 19 மொழிகளில் வாணி ஜெயராம் பாடல்களை பாடியுள்ளார். கேள்வியின் நாயகனே, ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் என்பவை உள்ளிட்ட பல பாடல்கள் மூலம் புகழ்பெற்றார் வாணி ஜெயராம். தமிழ் திரையுலகில் 1974-ம் ஆண்டு தீர்க்கசுமங்கலி என்ற படத்தின் மல்லிகை என் மன்னன் மயங்கும் என்ற பாடலை முதல் முறையாக பாடினார்.

ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி என புகழப்படுபவர் வாணி ஜெயராம். 1975, 1980 மற்றும் 1991- ம் ஆண்டுகளில் சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதுகளை பெற்றுள்ளார் வாணி ஜெயராம். இந்தாண்டு குடியரசு தினத்தன்று ஒன்றிய அரசின் பத்மபூஷன் விருது வாணி ஜெயராமுக்கு அறிவிக்கப்பட்டது.

Related Stories: