நெடும்பலம் அரசு விதை பண்ணையில் மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த மாப்பிள்ளை சம்பா நெற்கதிர் சாய்ந்தது

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நெடும்பலம் அரசு விதைப்பண்ணையில் சாகுபடி செய்யப்பட்ட பாரம்பரிய நெல்லான மாப்பிள்ளை சம்பா அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் மழையால் நெற்கதிர்கள் சாய்ந்தது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நெடும்பலம் அரசு விதை பண்ணைகளில் 55 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

பாரம்பரிய நெல் ரகங்களை இயற்கை வழியில் சாகுபடி செய்து விதை உற்பத்தி செய்து அதன் மூலம் கிடைக்கும் விதை நெல்லை விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானிய விலையில் வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை திட்டமிட்டு முதல் கட்டமாக நெடும்பலம் அரசு விதைப் பண்ணையில் கடந்த ஆண்டு 5 ஏக்கரில் இயந்திர நடவு மூலம் மாப்பிள்ளை சம்பா நேரடி விதைப்பும், தூய மல்லி 10 ஏக்கரில் இயந்திர நடவு பணியும் வேளாண்மை உதவி இயக்குநர் சாமிநாதன், பண்ணை வேளாண்மை அலுவலர் செந்தில் மேற்பார்வையில் செய்யப்பட்டு இருந்தது. இதில் கடந்த மாதம் அறுவடை துவங்கி 10 ஏக்கர் தூயமல்லி அறுவடை முடிந்தது.

இந்த நிலையில் சில தினங்களாக பெய்துவரும் மழையால் தாலுக்கா முழுவதும் முற்றிலும் சம்பா அறுவடை பாதித்து உள்ளது. இந்த அரசு விதைப்பண்ணையில் இதுவரை 15 ஏக்கரில் மட்டும் மழை முடிந்துள்ளது. இந்த நிலையில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் 5 ஏக்கர் மாப்பிள்ளை சம்பா நெல் கதிர்கள் சாய்ந்துவிட்டது. இதேபோல் நெல் அறுவடை செய்யப்பட்ட வயலில் உளுந்து சாகுபடி செய்திருந்த நிலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

Related Stories: