பியூட்டி பார்லரில் கொள்ளையடித்த 3 பேர் கோர்ட்டில் சரண்: நகை, செல்போன்கள் பறிமுதல்

அண்ணாநகர்: சென்னை முகப்பேரில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் கடந்த டிசம்பர் மாதம் 8ம் தேதி நுழைந்த 6 பேர், கத்தியை காட்டி மிரட்டி, பெண் ஊழியர்களிடம் இருந்து ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த 8 செல்போன்கள், 3 சவரன் மற்றும் ரூ.7,500 ரொக்கத்தை கொள்ளை அடித்து சென்றனர். இந்த வழக்கு சம்பந்தமாக சிட்லபாக்கம் பகுதியை சேர்ந்த ஆகாஷ் (19) அரிகிருஷ்ணன் (18) புகனேஷ்வரன் (21) ஆகிய 3 பேரை டிசம்பர் 12ம் தேதி நொளம்பூர் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும், இவ்வழக்கு தொடர்பாக செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த கவியரசன் (29), ரஞ்சித் (எ) பொம்மை ரஞ்சித் (19), ஸ்ரீராம் (19) ஆகிய 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், செம்மஞ்சேரி பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கு சம்பந்தமாக, இவர்கள் கடந்த ஜனவரி மாதம் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதையடுத்து, அவர்களை போலீசார் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். மேலும், அவர்களுடைய வீட்டில் பதுக்கி வைத்து இருந்த 3 சவரன், 3 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, 3 பேரையும் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: