சென்னை - பெங்களூரு விரைவுச்சாலைக்கு நிலம் எடுப்பில் ரூ.100 கோடி மோசடி..? அதிர்ச்சி தகவல்..!

சென்னை: அரசு நிலத்துக்கு முறைகேடாக பட்டா பெற்று அரசுக்கே திரும்ப அளித்து இழப்பீடு பெற்ற வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. சென்னை - பெங்களூரு இடையே சாலை போக்குவரத்துக்காக விரைவுச்சாலை திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்காக 7,800 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டு 1,000 ஹெக்டேட் நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கை கடந்த அதிமுக ஆட்சியின் போது நடைபெற்றது.

இதில் ஸ்ரீபெரும்புத்தூரில் உள்ள பீமன்தாங்கல் கிராமத்தில் 175 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதற்காக 83 பேருக்கு 200 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டது. ஆனால் அரசுக்கு சொந்தமான அநாதினமான நிலங்களுக்கு மோசடியாக பட்டா பெற்று, நெடுஞ்சாலை துறையிடம் இழப்பீடு பெற்றது வெளிச்சத்துக்கு வந்தது. நிலங்களுக்கு போலி ஆவணங்களை வழங்கியவர்களுக்கு இழப்பீடு வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ராஜேந்திரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

வழக்கு விசாரணைக்கு வந்த போது போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட 20.52 கோடி ரூபாயை திரும்ப வசூலிக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது. முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி சார்பில் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையை படித்து பார்த்த நீதிபதி விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று அதிருப்தி தெரிவித்தார். நத்தை வேகத்தில் செயல்பட்டால் வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற நீதிமன்றம் தயங்காது என அவர் எச்சரித்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மோசடியாக பெற்ற 80 கோடி ரூபாய் இழப்பீட்டு தொகையை இன்னும் வசூலிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில் இந்த திட்டத்திற்காக 190 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ள நிலையில் 20 கோடி ரூபாய் மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவிப்பதாகவும், மீதமுள்ள தொகை எவ்வாறு வழங்கப்பட்டத, என்பதை கண்டறிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அரசு நிலத்தையே போலி ஆவணங்கள் மூலம் அரசுக்கே விற்று இழப்பீடு பெற்ற மோசடி சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கிய  நிலையில் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டால் இன்னும் பல உண்மைகள்  வெளியே வரும் என புகார் தாரர்கள் தெரிவித்திருப்பது மோசடிக்கு துணைபோன அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: