சினிமா உலகில் தனக்கென தனி உலகத்தை உருவாக்கி கொண்டவர் கே.விஸ்வநாத்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்

டெல்லி: தெலுங்கு சினிமாவின் மூத்த கலைஞரும், தாதா சாகேப் விருது பெற்ற பழம்பெரும் இயக்குனருமான கே.விஸ்வநாத் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். விஸ்வநாத் மறைவுக்கு வருந்துவதாக டிவிட்டரில் தெரிவித்துள்ள பிரதமர், சினிமா உலகில் தனக்கென தனி உலகத்தை உருவாக்கி கொண்டவர் விஸ்வநாத் என்றும், படைப்பாற்றல் மிக்க இயக்குநர், பன்முகத்தன்மை கொண்டவர் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் பல்வேறு கருப்பொருள்களில் அவரது படங்கள் பல தசாப்தங்களாக பார்வையாளர்களை மகிழ்வித்ததாகவும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் கே.விஸ்வநாத் மறைவு:

தாதா சாகேப் பால்கே விருது பெற்ற பழம்பெரும் திரை கலைஞர் கே.விஸ்வநாத் காலமானார். அவருக்கு வயது 92. கலா தபஸ்வி என்று அழைக்கப்பட்ட கே.விஸ்வநாத், இயக்குநர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர். சங்கராபரணம், சலங்கை ஒலி உட்பட 53 படங்களை இயக்கியுள்ளார். தெலுங்கு திரையுலகத்தில் அதிகம் இயங்கினாலும் இந்தியாவின் முக்கிய படைப்பாளிகளில் ஒருவராக கருதப்பட்டவர் கே.விஸ்வநாத். தனது படங்களில் சாதிய ஏற்றத்தாழ்வுகள், பெண்ணுரிமை குறித்து பேசியவர்.

தமிழில் முகவரி, யாரடி நீ மோகினி, ராஜபாட்டை உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். 5 தேசிய விருதுகள், 7 நந்தி விருதுகளை பெற்றவர். ஐதராபாத்தில் வசித்து வந்த இயக்குநர் கே.விஸ்வநாத், வயது முதிர்வால் காலமானார். அவரது மறைவால் திரை உலகத்தினரும், ரசிகர்களும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Related Stories: