ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மத்தியப்படை பாதுகாப்பு வழங்கப்படும்: தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மத்தியப்படை பாதுகாப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தலுக்காக 2 கம்பெனி மத்திய ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவர். பிப்ரவரி 13-ம் தேதியில் இருந்து மார்ச் மாதம் 2ம் தேதி வரை ஈரோடு கிழக்கு தொகுதியில் பாதுகாப்பு பணியில் மத்திய படையினர் ஈடுபடுத்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறும் பட்சத்தில் மத்தியப்படையினர் தேர்தல் அதிகாரி, தேர்தல் அலுவலர்களுக்கு பாதுகாப்பு அளிப்பார்கள்.

இவிஎம் மிஷின்களுக்கு பாதுகாப்பு கொடுப்பார்கள். வாக்கு எண்ணும் பகுதியில் துப்பாக்கி ஏந்தியபடி ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். வன்முறையில் ஈடுபடும் நபர்களை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி இடைத்தேர்தல் பொது பார்வையாளராக சிக்கிமை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ராஜ்குமார் யாதவும், காவல் பார்வையாளராக மேற்கு வங்க ஐபிஎஸ் அதிகாரி சுரேஷ் குமாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்:

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏ-வாக காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா இருந்தார். இவர் கடந்த 4ம் தேதி மரணமடைந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெற உள்ளது. பிப்ரவரி 7ம் தேதி வரை வேட்பு மனுத்தாக்கல் செய்யப்படுகிறது. 8ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறும். திமுக கூட்டணியில் மறைந்த எம்எல்ஏ-வான திருமகன் ஈவெராவின் தந்தை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் ஆனந்த், அமமுக சார்பில் சிவபிரசாந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா, ஓபிஎஸ் அணி சார்பில் செந்தில்முருகன், ஈபிஎஸ் அணி சார்பில் தென்னரசு வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: