என்னுடைய மகன் திருமகன் ஈவெரா விட்டுச் சென்ற பணியை தொடருவேன்: வேட்புமனுவை தாக்கல் செய்த பின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்புமனு தாக்கல் செய்தார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 31ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால், மாநகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் வரை 10 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

நேற்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா, தமிழ் தாயக மக்கள் முன்னேற்ற கட்சி முகமது அனிபா, திருச்சுழியை சேர்ந்த சுந்தரமூர்த்தி, ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி மாநில தலைவர் காந்தி, சென்னை விருகம்பாக்கம் இசக்கிமுத்து, உழைப்பாளி மக்கள் கட்சி சார்பில் குப்புசாமி, முகமது இலியாஸ், மண்ணின் மைந்தர்கள் கழகம் ஜார்ஜ் பெர்னாண்டஸ், தேசிய மக்கள் கழகம் விஜயகுமாரி, தங்கவேல் ஆகிய 10 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிகளை திமுக கூட்டணி சிறப்பாக செய்கிறது. இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு மக்கள் வெற்றி வாய்ப்பு தருவார்கள். நான் வெற்றி பெற்றால், ஈரோடு மக்களுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வருவேன். மதச்சார்பற்ற கூட்டணி கட்சி வேட்பாளரையே ஈரோடு மக்கள் ஆதரிக்கிறார்கள். என்னுடைய மகன் திருமகன் ஈவெரா விட்டுச் சென்ற பணியை தொடருவேன். யார் எதிர்க்கிறார்கள் என்பது பற்றி எனக்கு கவலையில்லை. இவ்வாறு கூறினார்.

Related Stories: