அதானி விவகாரம்: எதிர்கட்சிகளின் அமளி காரணமாக 2வது நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கியது..!

டெல்லி: எதிர்கட்சிகளின் அமளி காரணமாக, நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் மக்களவை தேர்தலுக்கு முன்பு மோடி அரசின் கடைசி முழுபட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. நேற்று மக்களவை கூடியதும் காங்கிரஸ், திமுக, சிவசேனா, இடதுசாரி எம்பிக்கள், ஆம்ஆத்மி, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, கேரளா காங்கிரஸ், ஐயுஎம்எல் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக எழுந்து அதானி குழும பங்கு முறைகேடு தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தினர்.

இதற்கு சபாநாயகர் ஓம்பிர்லா அனுமதி வழங்க மறுத்தார். ஆனால் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். பதிலுக்கு பா.ஜ எம்பிக்களும் கோஷம் எழுப்பியதால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் கூடியபோது தொடர்ந்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.  மாநிலங்களவையிலும் இதே நிலை நீடித்தது.

அதை தொடர்ந்து நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் அதானி நிறுவன விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் 2வது நாளாக தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், இரண்டாவது நாளாக இன்றும் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை பிற்பகல் 2:30 மணி வரைக்கும், மக்களவை 2 மணி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: