ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக ஆதரவு யாருக்கு?.. இபிஎஸ், ஓபிஎஸ் உடன் அடுத்தடுத்து அண்ணாமலை சந்திப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்துடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ம் தேதி நடைபெற உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் தென்னரசு, ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் செந்தில்முருகன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், ‘இரட்டை இலை’ சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுமா? களத்தில் இருந்து விலகுமா? அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவு தருமா? ஓ.பன்னீர் செல்வம் தரப்பிற்கு ஆதரவு தருமா? என்பதில் தொடர்ந்து குழப்பாமான சூழ்நிலை நிலவி வந்தது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சந்தித்தார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு நேரில் சென்ற அண்ணாமலை பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். இந்த சந்திப்பின் போது அதிமுக தரப்பில் ஜெயக்குமார் உடன் இருந்தார். அதேவேளை, பாஜக தரப்பில் கரு.நாகராஜன், பாஜக மேலிடப்பொறுப்பாளர் ரவி உடன் இருந்தனர். இந்த சந்திப்பு 30 நிமிடங்களுக்கு மேல் நீடித்தது. எடப்பாடி பழனிசாமியை சந்தித்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை பாஜக இன்னும் அறிவிக்காத நிலையில், ஓபிஎஸ், இபிஎஸ் உடன் தனித்தனியாக அண்ணாமலை சந்தித்து பேசியுள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டாலும் பின்வாங்க மாட்டோம் என எடப்பாடி தரப்பு தெரிவித்திருந்தது. எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரிக்க முடியாது என தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: