தனியார் கல்லூரி விடுதியில் நர்சிங் மாணவி மர்மச்சாவு: போலீசார் விசாரணை

புழல்: தனியார் கல்லூரி விடுதியில் நர்சிங் மாணவி மர்மமான முறையில் இறந்த சம்பவம் புழல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். புழல் சிதம்பரம் நகர் அம்பத்தூர் சாலையில், தனியாருக்கு சொந்தமான பெண்கள் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்குள்ள விடுதியில் தங்கி 100க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இதில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த சுபஸ்ரீ (20) என்பவர் தங்கி, பிஎஸ்சி நர்சிங் 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை தனது அறையில் தூங்கிய சுபஸ்ரீ, வெகுநேரம் ஆகியும் எழுந்திருக்கவில்லை.

 இதனால், சந்தேகமடைந்த சக மாணவிகள் அவரை எழுப்பியுள்ளனர். அப்போது அவருக்கு வேர்த்துகொட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள், உடனே ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அங்கு சுபஸ்ரீயை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த புழல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு, அதே மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: