ரஞ்சி கோப்பை காலிறுதி 93 ரன்னில் சுருண்டது ஆந்திரா: ம.பி.க்கு வெற்றி வாய்ப்பு

இந்தூர்: மத்திய பிரதேச அணியுடனான ரஞ்சி கோப்பை காலிறுதியில், 151 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய ஆந்திரா 93 ரன்னில் ஆல் அவுட்டானது. ஹோகர் ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற ம.பி. அணி பந்துவீசிய நிலையில்... ஆந்திரா முதல் இன்னிங்சில் 379 ரன் குவித்தது. ரிக்கி புயி 149 ரன், கரண் ஷிண்டே 110 ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய ம.பி. 2ம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்திருந்தது. 3ம் நாளான நேற்று அந்த அணி 228 ரன்னுக்கு முதல் இன்னிங்சை இழந்தது. ஷுபம் ஷர்மா 51, கேப்டன் ஆதித்யா 31, கார்த்திகேயா 24, ஹிமான்ஷு 22, யஷ் துபே, ரஜத் பத்திதார் தலா 20 ரன் எடுத்தனர். ஆந்திரா பந்துவீச்சில் பிரித்வி ராஜ் 5, சசிகாந்த் 3, நிதிஷ், லலித் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 151 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்லிய ஆந்திரா, எதிர்பாராத வகையில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து 93 ரன்னுக்கு சுருண்டது.

ஹெப்பர் 35, சோயிப் முகமது 16, நிதிஷ் 14, கேப்டன் ஹனுமா 15 ரன் எடுத்தனர். ம.பி. பந்துவீச்சில் ஆவேஷ் கான் 4, கவுரவ் 3, கார்த்திகேயா 2, சரண்ஷ் 1 விக்கெட் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து, 245 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ம.பி. அணி 3ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 58 ரன் எடுத்துள்ளது. கை வசம் 10 விக்கெட் இருக்க, ம.பி. வெற்றிக்கு இன்னும் 187 ரன் தேவைப்படும் நிலையில் இன்று 4வது நாள் ஆட்டம் நடக்கிறது. கர்நாடகா 606: பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் உத்தரகாண்ட் அணிக்கு எதிராக நடந்து வரும் காலிறுதியில், கர்நாடகா முதல் இன்னிங்சில் 606 ரன் குவித்து ஆல் அவுட்டானது. சமர்த் 82, மயாங்க் 83, படிக்கல் 69, நிகின் 62, மணிஷ், கவுதம் தலா 39, ஷரத் 33 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். அபாரமாக விளையாடிய ஷ்ரேயாஸ் கோபால் 161 ரன்னுடன் (288 பந்து, 16 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். முன்னதாக, முதல் இன்னிங்சில் 116 ரன்னுக்கு சுருண்டிருந்த உத்தரகாண்ட், 490 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கியது. 3ம் நாள் முடிவில் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 106 ரன் எடுத்துள்ளது.

இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவே இன்னும் 384 ரன் தேவை என்ற நெருக்கடியுடன் உத்தரகாண்ட் இன்று 4ம் நாள் சவாலை சந்திக்கிறது. சவுராஷ்டிரா திணறல்: ராஜ்கோட்டில் பஞ்சாப் அணியுடன் நடக்கும் காலிறுதியில் சவுராஷ்டிரா 2வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 138 ரன் எடுத்துள்ளது. முதல் இன்னிங்சில் சவுராஷ்டிரா 303 ரன், பஞ்சாப் 431 ரன் குவித்தன. கை வசம் 6 விக்கெட் இருக்க, சவுராஷ்டிரா 10 ரன் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளதால் அந்த அணி கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. பெங்கால் ஆதிக்கம்: கொல்கத்தா ஈடன் கார்டனில் ஜார்க்கண்ட் அணிக்கு எதிராக நடக்கும் காலிறுதியில் பெங்கால் அணி வெற்றியை நெருங்கியுள்ளது. முதல் இன்னிங்சில் ஜார்க்கண்ட் 173, பெங்கால் 328; ஜார்க்கண்ட் 2வது இன்னிங்ஸ் 162/7. கை வசம் 3 விக்கெட் இருக்க, ஜார்க்கண்ட் 7 ரன் மட்டுமே முன்னிலை பெற்றுள்ள நிலையில் இன்று 4ம் நாள் ஆட்டம் நடக்கிறது.

Related Stories: