லேப்டாப்பில் பணி செய்தபோது; வீட்டுக்குள் நைசாக புகுந்து 27 சவரன் நகை கொள்ளை

தண்டையார்பேட்டை: லேப்டாப்பில் தம்பதி பணி செய்துகொண்டிருந்தபோது வீட்டுக்குள் புகுந்து 27 சவரன் நகை கொள்ளையடித்து தப்பிய நபர்களை தேடி வருகின்றனர். சென்னை தண்டையார்பேட்டை ஒய்எம்சிஏ. குப்பம் 4வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (27). இவர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவரது மனைவி, சென்னை தரமணியில் உள்ள டைடல் பார்க்கில் பணியாற்றுகிறார். இவர்களது வீட்டின் கீழ் தளத்தில் சுரேஷ்குமாரின் பெற்ேறார் வசிக்கின்றனர். தற்போது சுரேஷ்குமாரும் அவரது மனைவியும் வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வருகின்றனர்.

நேற்று நள்ளிரவுவரை  இரண்டு பேரும் லேப்டாப்பில் பணி செய்துவிட்டு தூங்க செல்வதற்காக கதவை பூட்டுவதற்கு சென்றுள்ளனர். அப்போது இரும்பு பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்து துணிகள் அனைத்தும் சிதறிக்கிடந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். இதன்பிறகு பீரோவில் பார்த்தபோது நெக்லஸ், செயின், ஆரம், கம்மல், மோதிரம், வளையல் உள்பட 27 சவரன் நகை கொள்ளைப் போனது தெரியவந்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் காசிமேடு போலீசார் வந்து விசாரணை நடத்தினர். இதுசம்பந்தமாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள்.

Related Stories: