கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத்தில் திருப்பலி பூஜை மீண்டும் தமிழில் நடத்த வேண்டும்: தமிழ்நாட்டு பக்தர்கள் வலியுறுத்தல்

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில் தமிழில் திருப்பலி பூஜை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாட்டு பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். கடந்த 2009ல் இலங்கை உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த பின்பு, கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் இலங்கை அரசால் நடத்தப்பட்டு வந்தது. இதனிடையே கச்சத்தீவில் சிறிய கடற்படை தளம் அமைக்கப்பட்டது. இதன்மூலம் கச்சத்தீவு இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. கச்சத்தீவில் ஓட்டுக் கட்டிடமாக இருந்த பழமையான அந்தோணியார் ஆலயம் இடித்து அகற்றப்பட்டு புதிய வடிவில் இலங்கை அரசால் கட்டப்பட்டது.

இதன் மூலம் ஆலய பராமரிப்பு, இதில் நடைபெறும் திருவிழா அனைத்தும் இலங்கை கடற்படையின் பொறுப்பில் கொண்டு வரப்பட்டது. கடற்படையின் பொறுப்பில் வருவதற்கு முன்பு வரை அந்தோணியார் ஆலய திருவிழாவின் போது நடத்தப்படும் அனைத்து நிகழ்ச்சிகளிலும், திருப்பலி பூஜை மற்றும் பிரார்த்தனைகள் அனைத்தும் தமிழில் தான் நடைபெற்றது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சிங்கள மொழியில் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ் மொழி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாட்டில் இருந்து செல்லும் பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம், நெடுந்தீவு உள்ளிட்ட இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருவிழாவில் பங்கேற்கும் பாதிரியார்கள் மற்றும் ராமேஸ்வரம் பகுதியில் இருந்து செல்லும் பாதிரியார்கள், தமிழர்களாக இருக்கின்றபோதும் இவர்கள் தமிழில் பூஜை நடத்துவதற்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. விழாவில் தமிழ் மொழியை முற்றிலுமாகப் புறக்கணித்து சிங்கள மொழி திணிக்கப்பட்டு வருவதாக இலங்கை தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டில் இருந்து செல்லும் பக்தர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

இந்திய - இலங்கை இரு நாட்டு பக்தர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு முன்பு போல் கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில் தமிழிலேயே திருப்பலி பூஜை உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெறுவதற்கு ஒன்றிய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாட்டு பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: