போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஏற்படுத்தப்பட்ட புறவழிச்சாலையில் மின் விளக்கு வசதி செய்து கொடுக்க வலியுறுத்தல்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகரில் போக்குவரத்து நெரிசலை  தவிர்க்க ஏற்படுத்தப்பட்ட  புறவழிச்சாலையில், பல கிலோ மீட்டர் தொலைவிற்கு மின் விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரத்தில் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் அச்சடைகின்றனர். புறவழிச்சாலையில் மின்விளக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர். பொள்ளாச்சி நகரிலிருந்து பிரிந்து செல்லும் முக்கிய சாலைகளான பல்லடம் ரோடு, கோவை ரோடு, உடுமலை ரோடு, பாலக்காடு ரோடு, வால்பாறை ரோடு உள்ளிட்ட நெடுஞ்சாலைத்துறைக்குட்பட்ட சாலைகளில் பகல் மற்றும் இரவு நேரத்தில் தொடர்ந்து வாகன போக்குவரத்து உள்ளது.

இந்த சாலைகள் வழியாக நகர் பகுதிக்கு அதிகளவு வாகனங்கள் வந்து செல்வதால், அடிக்கடி விபத்து மட்டுமின்றி போக்குவரத்து நெரிசலும் உண்டாகிறது.

அதிலும், நகரில் தேர்நிலை பகுதி மற்றும் மார்க்கெட் ரோடு, ராஜாமில் ரோடு, நியூஸ்கீம் ரோடு, வெங்கட்ரமணன் வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில், போக்குவரத்து நெரிசலால் அந்த வழியாக பிற வாகனங்கள் விரைந்து செல்ல  முடியாத நிலை உண்டாகிறது. மேலும், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மணிக்கணக்கில் வாகனங்கள் ஸ்தம்பித்து நீண்ட வரிசையில் நிற்கிறது.

இதையடுத்து, நகர் வழியாக கோவை, பல்லடம், தாராபுரம், மற்றும் உடுமலை மார்க்கமாக செல்லும் வாகனங்கள் விரைந்து செல்ல வசதியாக கடந்த 5 ஆண்டுக்கு முன்பு, கிழக்கு வட்ட புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையானது, உடுமலைரோடு திப்பம்பட்டியிலிருந்து துவங்கி அனுப்பர்பாளையம், ஆலாம்பாளையம், தொப்பம்பட்டி, குள்ளக்காபாளையம் வழியாக கோவை ரோடு ஆச்சிப்பட்டி வரை என சுமார் 15 கி.மீ  தூரத்துக்கு புதிய சாலை அமைக்கப்பட்டதுடன், இதில் சுமார் 3 ஆண்டுக்கு முன்பு போக்குவரத்து  துவங்கப்பட்டது.

இதனால், இந்த வழித்தடத்தில் பகல் மற்றும் இரவு நேரம் என தொடர்ந்து வாகன போக்குவரத்து உள்ளது. தற்போது இருசக்கர வாகனங்கள் முதல், கனரக வாகனங்கள் வரையிலும் கிழக்கு வட்ட புறவழிச்சாலை வழியாக செல்கிறது. ஆனால், வாகனங்கள் அதிகரித்து வரும் இவ்வேளையில், புறவழிச்சாலை அமைக்கப்பட்ட முக்கிய இடங்களில் உயர் மின்கம்பம் அமைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், தொப்பம்பட்டி உள்ளிட்ட  நான்குரோடு சந்திக்கும் பகுதிகளில் உயர் மின்கோபுரம் ஏற்படுத்தாமல் உள்ளது.

இதனால், அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர்.அதுமட்டுமின்றி புறவழிச்சாலையில் வளைவுகள் அதிகம் உள்ள பகுதி மட்டுமின்றி வாகனங்கள் விரைந்து செல்லும் பகுதியிலும் என பல கி.மீ தூரத்துக்கு மின்விளக்கு வசதி ஏற்படுத்தாமல் உள்ளன. குடியிருப்புகள் இருக்கும் இடத்தை தவிர, பிற பகுதியில் மின் விளக்கு வசதி இல்லாததால், இப்போதும் இரவு நேரத்தில் அடிக்கடி விபத்து நேரிடுகிறது.

எனவே, திப்பம்பட்டியிலிருந்து துவங்கி கோவை ரோடு ஆச்சிப்பட்டி வரையிலும் உள்ள  புறவழிச்சாலையின் முக்கிய இடங்களில் உயர் மின்கோபுரமும், இருள் சூழ்ந்த பகுதிகளில் மின்கம்பம் ஏற்படுத்தி, வாகன ஓட்டிகளின் அச்சத்தை போக்க மின்விளக்கு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: