ரஞ்சி கோப்பை காலிறுதி சவுராஷ்டிராவுக்கு எதிராக பஞ்சாப் அணி முன்னிலை: பிரப்சிம்ரன், நமன் திர் அபார சதம்

ராஜ்கோட்: சவுராஷ்டிரா அணியுடனான ரஞ்சி கோப்பை காலிறுதியில், பஞ்சாப் அணி முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றது. எஸ்சிஏ ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 303 ரன் குவித்து ஆல் அவுட்டானது. பார்த் பட் ஆட்டமிழக்காமல் 111 ரன், ஸ்நெல் படேல் 70 ரன் விளாசினர். பஞ்சாப் பந்துவீச்சில் மார்கண்டே 4, பல்தேஜ் 3, சித்தார்த் கவுல் 2, நமன் திர் 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய பஞ்சாப், முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 3 ரன் எடுத்திருந்தது. பிரப்சிம்ரன் சிங் 2 ரன், நமன் திர் 1 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். அபாரமாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 46.1 ஓவரில் 212 ரன் சேர்த்தது. பிரப்சிம்ரன் 126 ரன் (158 பந்து, 13 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி பார்த் பட் பந்துவீச்சில் சகாரியா வசம் பிடிபட்டார். அடுத்து வந்த புக்ராஜ் மான் 1 ரன்னில் வெளியேற, நமன் திர் 131 ரன் (180 பந்து, 9 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசி தர்மேந்திரசிங் ஜடேஜா பந்துவீச்சில் டோடியாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

கேப்டன் மன்தீப் சிங் ஒரு முனையில் நிதானமாக விளையாடி ரன் சேர்க்க... அன்மோல்பிரீத் சிங் 9 ரன், நெஹல் வதேரா 4 ரன்னில் பெவிலியன் திரும்பினர். பஞ்சாப் அணி 2ம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 327 ரன் எடுத்துள்ளது. மன்தீப் 39 ரன், அன்மோல் மல்கோத்ரா 16 ரன்னுடன் களத்தில் உள்ளனர். சவுராஷ்டிரா பந்துவீச்சில் தர்மேந்திரசிங் ஜடேஜா, யுவராஜ்சிங் டோடியா தலா 2, பார்த் பட் 1 விக்கெட் வீழ்த்தினர். கை வசம் 5 விக்கெட் இருக்க 24 ரன் முன்னிலை பெற்றுள்ள பஞ்சாப், முதல் இன்னிங்சில் மேலும் வலுவான முன்னிலை பெறும் முனைப்புடன் இன்று 3வது நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது.

*பெங்கால் ரன் குவிப்பு

கொல்கத்தா ஈடன் கார்டனில் நடக்கும் காலிறுதியில், ஜார்க்கண்ட் அணி முதல் இன்னிங்சில் 173 ரன் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்த நிலையில், 2ம் நாளான நேற்று முதல் இன்னிங்சை தொடங்கிய பெங்கால் அணி ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 238 ரன் குவித்துள்ளது. அபிமன்யு ஈஸ்வரன் 77 ரன், சுதிப் குமார் கராமி 68 ரன், அனுஸ்துப் மஜும்தார் 25, கேப்டன் மனோஜ் திவாரி 13 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது 17 ரன், அபிஷேக் போரெல் 25 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 3வது நாள் ஆட்டம் நடக்கிறது.

*கர்நாடகா ஆதிக்கம்

பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கும் காலிறுதியில் உத்தரகாண்ட் முதல் இன்னிங்சில் 116 ரன் எடுத்து ஆல் அவுட்டான நிலையில், கர்நாடகா அபாரமாக ரன் குவித்து வலுவான முன்னிலை பெற்றுள்ளது. முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 123 ரன் எடுத்திருந்த அந்த அணி, நேற்றைய ஆட்டத்தின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 474 ரன் குவித்துள்ளது (116 ஓவர்). சமர்த் 82 ரன், கேப்டன் மயாங்க் அகர்வால் 83 ரன், தேவ்தத் படிக்கல் 69, நிகின் ஜோஸ் 62, மணிஷ் பாண்டே 39 ரன் விளாசி ஆட்டமிழந்தனர். ஷ்ரேயாஸ் கோபால் 103 ரன், பிஆர்.ஷரத் 23 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 5 விக்கெட் இருக்க, கர்நாடகா இப்போதே 358 ரன் முன்னிலை பெற்றுள்ளதால் உத்தரகாண்ட் அணி கடும் நெருக்கடியுடன் இன்று 3ம் நாள் சவாலை சந்திக்கிறது.

ஆந்திரா 379: இந்தூரில் மத்திய பிரதேச அணிக்கு எதிராக நடக்கும் காலிறுதியில், ஆந்திரா முதல் இன்னிங்சில் 379 ரன் குவித்து ஆட்டமிழந்தது. ரிக்கி புயி 149 ரன், கரண் ஷிண்டே 110 ரன் விளாசினர். ம.பி பந்துவீச்சில் அனுபவ் அகர்வால் 4, குமார் கார்த்திகேயா, கவுரவ் யாதவ் தலா 2, ஆவேஷ் கான், சரண்ஷ் ஜெயின் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய ம.பி அணி 2ம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்து திணறி வருகிறது. யஷ் துபே 20, ஹிமான்ஷு 22, ஷுபம் ஷர்மா 51, ரஜத் பத்திதார் 20 ரன்னில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா 20 ரன், அனுபவ் அகர்வால் (0) களத்தில் உள்ளனர்.

Related Stories: