கடவூர், தோகைமலை பகுதியில் கொத்தமல்லி சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரம்

*புதிய தொழில்நுட்பங்கள் குறித்து முன்னோடி விவசாயிகள் அறிவுறுத்தல்

தோகைமலை : கடவூர் மற்றும் தோகைமலை பகுதிகளில் கொத்தமல்லி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு முன்னோடி விவசாயிகள் புதிய தொழில் நுட்பங்களை அளித்து உள்ளனர்

கரூர் மாவட்டம் கடவூர் மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் உள்ள சில விவசாயிகள் கொத்தமல்லி சாகுபடியை விரும்பி செய்து வருகின்றனர் இதனால் கொத்தமல்லி சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு சாகுபடி செய்தால் அதிக மகதுல் பெற்று லாபம் பெறலாம் என்று முன்னோடி விவசாயிகள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளனர் எளிதில் வளரும் இந்த கொத்தமல்லி பல்வெறு தன்மைகள் உடைய மண் வகைகளிலும், வேறுபட்ட வானிலைகளிலும் வளரும் தன்மைகள் கொண்டது ஆகும். இதில் நல்ல வடிகால் வசதிகள் உள்ள இரு மண்பாட்டு நிலம் கொத்தமல்லி சாகுபடி செய்வதற்கு மிகவும் ஏற்றதாகும்.

இதற்கு மண்ணின் அமில கார நிலை 6 முதல் 8 வரை இருக்க வேண்டும். இதேபோல் மல்லி ஓரளவு களர் உவர் தாங்கி வளரக்கூடியது. காற்றின் சராசரி வெப்பநிலை 20 முதல் 25 வரை செல்சியஸ் இருந்தால் பயிரின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கும். மல்லி பயிர்கள் பெரும்பாலும் தோட்டப்பயிராக கரிசல் மண் நிலங்களில் பயிரிடுவதால் மழை அளவுகள் குறைவாகவோ அல்லது சீராகவோ இல்லாத காலங்களில் இதன் விளைச்சல் குறைவாகவே இருக்கும். இதுபோன்று நீர் பற்றாக்குறை இருக்கும் காலங்களில் வறட்சியை தாங்கி விளைச்சலை அதிகரிக்க விதை நேர்த்தி செய்தால் சிறந்தது.

இதில் எருக்கு மற்றும் வேலிக்கருவேல் இலையில் இருந்து தயாரிக்கப்பட்ட 2 சதவீதம் கரைசலில் உடைக்கப்பட்ட கொத்தமல்லி விதைகளை 16 மணி நேரம் ஊறவைத்து 1 லிட்டர் கரைசலுக்கு 800 கிராம் விதைகளை விதை நேர்த்தி செய்யலாம். பின்னர் விதைகளை நிழலில் உலர்த்தி மறுபடியும் விதைகளை 100 கிராம் அசோஸ்பைரில்லம் கலந்த ஆறிய கஞ்சியில் விதைநேர்த்தி செய்து நிழலில் உலர்த்தி விதைப்பதால் 15 நாட்களில் 89 சதவீதம் முளைப்புத் திறன் கிடைப்பதோடு முளைக்கும் நாற்றுகளின் வளர்ச்சியும், வீரியமும் அதிகமாகக் காணப்படும்.

விதை நேர்த்தி செய்யப்பட்டு முளைத்த நாறு;களில் 2வது பக்க கிளைகள் பு+ங்கொத்தில் உருவாகும் விதைகளின் எண்ணிக்கை மேம்படுவதுடன் வறட்சியை தாங்கும் காரணிகளான புரோலின், பச்சையம், நிலைப்புத்தன்மை மற்றும் திசுக்களின் தண்ணீர் சார்பளவு ஆகியவைகள் அதிகமாக இருப்பதால் நீர் பற்றாக்குறை உள்ள நிலங்களிலும் விளைச்சல் அதிகரிக்கிறது. கொத்த மல்லியில் கோ 1, கோ 2, கோ3 மற்றும் சாதனா ஆகிய ரகங்கள் அதிகமாக பயிரிடப்படுகிறது.

கொத்தமல்லி சாகுபடி செய்வதற்கு ஜுன், ஜுலை மற்றும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய 2 பருவங்களில் சாகுபடிலைய தொடங்கலாம். இதில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் அதிகமாக கொத்தமல்லி சாகுபடியை தொடங்கலாம். மண் பேணல் நிலத்தை 3 மற்றும் 4 முறை நன்றாக உழுது மண்ணை மிருதுவான பதத்திற்கு கொண்டுவர வேண்டும். கடைசி உழவின் போது ஒரு எக்டேருக்கு 10 டன் மக்கிய தொழு எருவிட்டு மண்ணுடன் கலந்து இறவையாக பயிரிடுவதாக இருந்தால் சமபாத்திகள் அமைத்து விதைகளை விதைக்க வேண்டும்.

தோட்டப்பயிர் சாகுபடி என்றால் உழவிற்கு முன்பு தொழு எருவிட்டு உழுது விதைகளை சீராகத் தூவிய பின்பு நன்றாக படர்ந்த மரக்கிளைகள் காய்ந்த மரக்கிளைகளை ஒடித்து மண்ணின் மேல் வைத்து மெதுவாக கையால் இழுப்பதன் மூலம் மண்ணில் தூவப்பட்ட விதைகள் மண்ணால் மூடப்பட்டு முளைக்க தொடங்கும். இறவையில் விதைகளை விதைக்கும் முன்பு ஒரு எக்டேருக்கு 15 கிலோ மழைச்சத்து, 40 கிலோ மணிச்சத்து, 20 கிலோ சாம்பல் சத்து ஆகியவற்றை கலந்து அடி உரமாக இட வேண்டும். நல்ல வடிகால் வசதி உள்ள நிலத்திலும் கார அமிலத்தன்மை 6 முதல் 8 வரை இருக்கும் மண் வகையிலும் கொத்தமல்லியை சாகுபடி செய்யலாம்.

இது 25 முதல் 28 டிகிரி வெப்பத்தில் வளரக்கூடியதோடு அனைத்து பருவத்திலும் சாகுபடி செய்யலாம். வெயில் காலங்களில் நிழல்வலை அமைத்து பயிர் செய்வதன் மூலம் கொத்தமல்லி இலைகள் வதங்காமல் இருக்கும். கொத்தமல்லி சாகுபடி செய்வதற்கு ஒரு எக்டேருக்கு 10 முதல் 15 கிலோ விதை தேவைப்படுகிறது. 15 முதல் 30 நாட்கள் வரை சேமித்த கொத்தமல்லி விதைகளை இரண்டாக உடைத்து அதனை நடவு செய்ய வேண்டும்.

உடைத்த விதைகளை காலணியால் மிதித்தும் அல்லது சொர சொரப்பான நிலப்பரப்பிலோ அல்லது உப்பு கலந்த காகிதத்திலோ தேய்த்து உறக்க நிலையில் இருக்கும் விதையினை கிழிப்படையச் செய்ய வேண்டும். பின்பு மேற்படி தெரிவிக்கப்பட்ட விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். இறவையாக இருந்தால் வரிசையில் விதைகளை இட வேண்டும். வரிசைக்கு வரிசை 20 செ.மீ இடைவெளி இருக்க வேண்டும்.

விதைக்கப்பட்ட 30 நாட்களில் வரிசையில் 15 செ.மீ இடைவெளியில் பயிர் இருக்குமாறு செடிகளை கீரையாக விற்பனைக்கு அனுப்பலாம். விதைத்த உடன் நீர் பாய்ச்ச வேண்டும். தொடர்ந்து விதைத்த 3 ம் நாள் அதன் பின்பு 7 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை நீர்பாய்ச்ச வேண்டும். கொத்தமல்லி சாகுபடியில் வதைக்கப்பட்ட 30ம் நாள் பயிரைக் கலைந்த பின்பு மேல் உரமாக ஒரு எக்டேருக்கு 15 கிலோ தழைச்சத்தை இட்டு மண்ணுடன் கலந்து நீர் பாய்ச்ச வேண்டும். செடிகளின் இலைகளைத் தாக்கும் மேல்சாம்பல் நோயினை தடுக்க நினையும் கந்தகம் அல்லது காரத்தேன் 0.2 சதவீதம் ஒரு எக்டேருக்கு 1 கிலோ 500 லிட்டர் தண்ணீர்) தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

இளம் பருவப் பயிரில் சேதம் ஏற்படுத்தும் இலை தின்னும் புழுக்களையும், பூக்கும் தருணத்தில் காணப்படும் அசுவுணியைக் கட்டுப்படுத்தவும் 5 சதவீதம் வேப்பம் பருப்புக் கரைசல் சாறை உபயோகிக்கவும். 0.05 சதவீதம் மிதைல்டேமாட்டான் மருந்தினை தெளிப்பதன் மூலம் பூக்கும் பருவத்தில் மகரந்தச் சேர்க்கை ஏற்படுத்தும் பு+ச்சிகளைக் கட்டுப்படுத்தி விளைச்சல் குறைவதைத் தவிர்க்கலாம். இதேபோல் விதைத்த 30 நாட்கள் கழித்து களைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

கொத்தமல்லி சாகுபடியில் விதைக்கப்பட்ட 30ம் நாள் இளங்கீரையாகவும், பின்னர் 60 மற்றும் 75 ம் நாட்களில் 50 சதவீதம் இலைகளையும் அறுவடை செய்யலாம். இதேபோல் 90 முதல் 110 வது நாட்களில் விதைகளை அறுவடை செய்யலாம். இதன் காய்கள் நன்றாக முதிர்ந்தவுடன் கொத்தமல்லி காயின் நிறம் பச்சை நிறத்தில் இருந்து பொன்னிறமாக மாறும் போது அறுவடை செய்யலாம். ஆகவே மேற்படி தெரிவிக்கப்பட்டு உள்ள தொழில் நுட்பங்கள் மூலம் சாகுபடி செய்தால் ஒரு எக்டேருக்கு 800 முதல் 1500 கிலோ வரை கிடைக்க வாய்ப்புகள் உள்ளது என்று முன்னோடி விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.

Related Stories: