பாஜக கூட்டணியில் இருந்து இபிஎஸ் அணி விலகல்?.. எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கை குறித்து பாஜக அதிர்ச்சி..!

சென்னை: பாஜக கூட்டணியில் இருந்து இபிஎஸ் அணி விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு கிழக்கு  தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவெரா கடந்த  மாதம் 4ம் தேதி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக உள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பினார். இதை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம் கடந்த 18ம் தேதி ஈரோடு  கிழக்கு தொகுதிக்கான தேர்தல் அறிவிப்பினை வெளியிட்டது. இதையடுத்து வருகின்ற 27ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

முன்னதாக தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் ஜனவரி 31ம் தேதி (நேற்று) முதல் பிப்ரவரி 7ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரர்  ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவதாக கடந்த வாரமே அறிவிக்கப்பட்டது. இதையடுத்து திமுக கூட்டணி கட்சியினர் அங்கு பிரசாரத்தை தொடங்கி விட்டனர். இதேபோல தேமுதிக சார்பில் ஆனந்த், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் சிவபிரசாந்த், நாம் தமிழர் கட்சி மேனகா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பிரதான எதிர்கட்சியான அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம்  தலைமையில் ஒரு அணியாகவும் தனித்தனியாக இருப்பதால் வேட்பாளரை அறிவிக்க முடியாமல் குழப்பம் நீடித்து வந்தது. வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 3 முறை ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால்  முடிவு எடுக்க முடியவில்லை. குறிப்பாக இரட்டை இலை சின்னம் தொடர்பாக  கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பது, அதிமுக பல்வேறு அணியாக பிரிந்திருப்பது, பாஜ முடிவு அறிவிக்காமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வேட்பாளர் தேர்வில் இழுபறி மற்றும் குழப்பம் நீடித்து வந்தது.

குறிப்பாக இரட்டை இலை சின்னம் இல்லாமல் போய்விட்டால் தேர்தலில் டெபாசிட் வாங்குவது இயலாத காரியம் என்பதால் அதிமுக முக்கிய நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட முன்வரவில்லை. தொடக்கத்தில் முன்னாள் அமைச்சரும் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால் தற்போதைய தொகுதி கள நிலவரம் மோசமாக உள்ளதால் வேட்பாளர் போட்டியில் இருந்து பின்வாங்கிக்கொண்டார். இதையடுத்து முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின. ஆனாலும் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடியாமல் எடப்பாடி பழனிசாமி அணியினர் திணறி வந்தனர்.

நேற்று முன்தினம் ஈரோட்டில் நள்ளிரவு 12 மணி வரை எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட போதிலும் முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில் வேட்புமனு தாக்கல் நேற்று (31ம் தேதி) தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இனியும் வேட்பாளர் அறிவிக்காமல் இருந்தால் கட்சி தலைமைக்கு பெரும் அவப்பெயர் ஏற்படும் என்று கருதிய எடப்பாடி பழனிசாமி இன்று காலை ஈரோடு கிழக்கு தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளருமான கே.எஸ்.தென்னரசுவை வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனிடையே முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அதிமுகவின் பிரம்மாண்ட தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார்.

பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி என்பதற்கு பதிலாக தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்று பணிமனையின் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் எடப்பாடி அணிக்கு ஆதரவு தர பாஜக மறுத்து வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு பதிலடி கொடுத்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்த அதிமுக தற்போது தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என பெயர் சூட்டியதால் பாஜக அதிர்ச்சி அடைந்துள்ளது. ஈரோடு இடைத்தேர்தலுக்காக அதிமுக அமைத்துள்ள தேர்தல் பணிமனையில் பாஜகவின் பெயரோ, கொடியோ இடம்பெறவில்லை. பிரதமர் மோடி, அமித்ஷா, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, உள்ளிட்ட பாஜக தலைவர்களின் படங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.

பாஜகவின் நிலைப்பாடே எங்கள் நிலைப்பாடு என அறிவித்தன ஜான் பாண்டியன், ஏ.சி.சண்முகம் ஆகியோரின் படங்களும் இடம்பெறவில்லை. பிரதமர் மோடி படம் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டதாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அதிமுக பேனரில் ஜி.கே.வாசன், ஜெகன்மூர்த்தி, கிருஷ்ணசாமி ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ளன. எடப்பாடி பழனிசாமி அணியின் செயல்பாட்டுக்கு உரிய நேரத்தில் பதில் தரப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Related Stories: