திருசூர்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்-கிராம மக்கள் கோரிக்கை

போளூர் : போளூர் அருகே திருசூர்பேட்டை சாலையில் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். போளூரிலிருந்து மேல்சோழங்குப்பம் செல்லும் சாலையில் போளூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருசூர் ஊராட்சி பேட்டை கிராமம் உள்ளது. இங்கு சாலையோரம் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதனை சுற்றியுள்ள தாங்கல், எடப்பிறை, சோமந்தபுத்தூர், காங்கேயனுர், குப்பம், நம்மியந்தல், படியம்பட்டு உட்பட 16 கிராமத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்தில் வாழும் மக்கள் உடல்நிலை பாதிப்பு, பிரசவம் மற்றும் பல்வேறு நோய்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள இங்கு வந்து செல்கின்றனர். மேலும் வியாபார பொருட்கள் வாங்க, பள்ளி மாணவ மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் இதனருகே உள்ள பஸ் நிலையம் வந்து போளூர், திருவண்ணாமலை போன்ற வெளியூர்களுக்கு செல்ல வேண்டும். மேலும், சுற்றியுள்ள கிராமத்தில் உள்ள கர்ப்பிணிகள் இங்கு வந்து தான் பிரசவம் பார்க்க வேண்டும். வழியில் விபத்து ஏற்பட்டால் இங்கு வந்து முதலுதவி பெற்றுக் கொண்டு செல்வார்கள்.

எந்த நேரத்திலும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து மக்கள் பயனடைந்து வருகிறார்கள். பகல் இரவு பாராமல் மக்கள் வந்து செல்லும் ஆரம்ப சுகாதார நிலையத்தின் பக்கத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் வந்து மக்கள் அருந்தி விட்டு சுகாதார நிலையத்திற்கு அருகே விழுந்து கிடக்கிறார்கள். மேலும் அங்கேயே உட்கார்ந்து மது அருந்துகிறார்கள். மதுபாட்டில்களை அங்கேயே போட்டு உடைக்கிறார்கள்.

இதனால் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருவதற்கு மக்கள் அச்சப்படுகிறார்கள். இந்த ஆரம்ப சுகாதார நிலையம் வரமுடியவில்லை என்றால் 15 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டும்.

இதனால் உயிர் சேதம் ஏற்படும். எனவே, ஆரம்ப சுகாதார நிலையத்தின் பக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடையை மக்கள் நலன் கருதி  வேறு இடத்திற்கு உடனடியாக மாற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: