அரசு பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது

அண்ணாநகர்: சென்னையை சேர்ந்த 40 வயது பெண், கடந்த டிசம்பர் மாதம் ஜெ.ஜெ. நகர் காவல்நிலையத்தில்  புகார் கொடுத்தார். அதில், ‘நான், இந்து சமய அறநிலையத்துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறேன். வீட்டில் தனியாக வசித்து வந்தபோது ஒரு வாலிபர் வீட்டிற்குள் புகுந்து என்னிடம் அத்துமீறி நடக்க முயன்றார். சத்தம்  போட்டதால்  அக்கம்பக்கத்தினர் வந்தனர். அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிவிட்டார். எனவே, வாலிபர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என கூறியிருந்தார். இதன் அடிப்படையில், போலீசார் வழக்குபதிவு செய்து சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அதில்,  ஒரு வாலிபர் தப்பியோடும் காட்சி தெளிவாக பதிவாகியிருந்தது. அதனடிப்படையில் போலீசார் நேற்று முன்தினம்  முகப்பேரில் தீவிர  வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த  ஒரு வாலிபரை மடக்கி, பிடித்து விசாரித்தனர். அவர், முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதையடுத்து, போலீசார் குற்றவாளிகளை அடையாளம் காட்டும் ஆப்ஸ் மூலம் செல்போனில் அவரை போட்டோ எடுத்து சோதனை செய்தனர். அதில், அவர் எந்தவித குற்ற சம்பங்களிலும் ஈடுபடவில்லை என்பது தெரியவந்தது. ஆனால், போலீசாரை பார்த்து ஏன் தப்ப முயன்றார் என்று விசாரிப்பதற்காக ஜெ.ஜெ.நகர் காவல்நிலையத்துக்கு அந்த வாலிபர் படத்தை அனுப்பிவைத்து இவர் மீது வழக்கு ஏதும் உள்ளதா என்று விசாரித்தனர்.

அதில்,  இந்துசமய அறநிலையத்துறை பெண் அதிகாரிக்கு  இவர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதுதொடர்பாக,  அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சுபாஷ்(21) என்பதும், முகப்பேரில் கூலி வேலை செய்து கொண்டு வாடகை வீட்டில் தங்கியிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சுபாஷ் மீது வீடு புகுந்து அத்துமீறி செயல்பட்டது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குபதிவு செய்த போலீசார், அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: