மோடி குறித்த ஆவணப்பட விவகாரம்: ‘பிபிசி’ தகவல் யுத்தத்தை நடத்துகிறது! ரஷ்ய வெளியுறவு அதிகாரி கண்டனம்

புதுடெல்லி: மோடி குறித்த ஆவணப்பட விவகாரத்தில், தகவல் யுத்தத்தை பிபிசி நிறுவனம் நடத்தி வருவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த காலத்தில் அங்கு நடந்த கலவரம் தொடர்பான ஆவணப் படத்தை பிபிசி செய்தி நிறுவனம் இரண்டு பாகங்களாக வெளியிட்டது. இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்ப இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆவணப் படத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மோடிக்கு எதிரான பிபிசியின் ஆவணப்படத்திற்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா கூறுகையில், ‘பிபிசி செய்தி நிறுவனம் பல்வேறு முனைகளில் தகவல் யுத்தத்தை நடத்தியுள்ளது என்பதற்கு மற்றொரு ஆதாரமாக மோடிக்கு எதிரான ஆவணப் படம் உள்ளது. பத்திரிகைத் தொழிலின் அடிப்படை தார்மீக உரிமைகளை புறக்கணித்துள்ளது. சில குழுக்களின் கைப்பாவையாக பிபிசி மாறிவிட்டது. இதனால் சிலரின் நலன்கள் நிறைவேற்றப்படுகின்றன’ என்று கூறினார். கடந்த சில தினங்களுக்கு முன் பிபிசியின் ஆவணப்படம் குறித்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட போது, அதற்கு அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக், பிரதமர் மோடிக்கு ஆதரவாக பதிலடி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: