உலக வரலாற்றில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புதிய முயற்சி: ஆன்லைன் மூலம் அணியை பயிற்சியாளர் வழி நடத்த முடியுமா? ஷாகித் அப்ரிடி சாடல்

கராச்சி : பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ஏற்கனவே அந்த பணியில் இருந்து நீக்கப்பட்ட மிக்கி ஆர்தர் மீண்டும் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதோடு உலக வரலாற்றிலே யாரும் செய்யாத வகையில் அணியை ஆன்லைன் மூலம் வழிநடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பாகிஸ்தான் மாஜி வீரர் ஷாகித்அப்ரிடி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டின் தலைமை பயிற்சியாளராக தற்போது மிக்கி ஆர்தர் செயல்பட்டு வருகிறார். அவர் அந்த பதவியை விட்டு வர முடியாது. இதனால் பாகிஸ்தான் அணியை ஆன்லைன் மூலம் வழிநடத்துமாறு அவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த முறைக்கு அவர் ஒப்புக்கொண்டால், உலகத்திலேயே முதல் முறையாக சர்வதேச அணிக்கு ஆன்லைன் மூலம் பயிற்சியாளராக செயல்பட உள்ள முதல் நபர் என்ற பெருமையை மிக்கி ஆர்தர் பெறுவார். இந்த நிலையில் இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள பாகிஸ்தான் அணியின் மாஜி வீரர் ஷாகித்அப்ரிடி கூறுகையில்,``பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எந்த வகையில் பயிற்சியாளர்களை நியமிக்க போகிறார்கள் என்று சத்தியமாக எனக்கு தெரியவுமில்லை, புரியவுமில்லை. ஆன்லைன் மூலம் பாகிஸ்தான் அணியை வழி நடத்தும் முறை யோசிப்பதற்கே அப்பாற்பட்ட விஷயமாக இருக்கிறது. அப்படி ஆன்லைன் மூலம் பயிற்சி கொடுக்க எதற்கு வெளிநாட்டு நபர் தேவைப்படுகிறார் என்று எனக்கு புரியவில்லை. பாகிஸ்தானிலே பல சிறந்த பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள். எந்த அரசியல் பின்னணியும் இல்லாத நபர் பயிற்சியாளராக வரவேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நினைப்பதில் எந்த தவறும் இல்லை.

இருப்பினும் அரசியலை கிரிக்கெட் உடன் இணைத்து பார்க்க வேண்டாம். நல்ல பயிற்சியாளர் மட்டுமே தேவை என்பதை கருத்தில் கொண்டு அவருடைய அரசியல் பின்னணி குறித்து எல்லாம் பார்க்காமல், உலகக் கோப்பைக்கு சிறந்த அணியை உருவாக்கும் ஒருவரைதான் நாம் பயிற்சியாளராக நியமிக்க வேண்டும்’’ என்றார். விரைவில் நியமனம் இதனிடையே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜாம் சேதி கூறுகையில், மிக்கி ஆர்த்தரை பயிற்சியாளராக கொண்டுவர நான் அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறேன். அவர் பயிற்சியாளராக திரும்பும் செய்தியை விரைவில் உங்களுடன் அறிவிப்பேன். அவருக்கு எவ்வளவு சம்பளம் என்பது குறித்து மட்டுமே இப்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது’’ என்றார்.

Related Stories: