பழைய பேருந்து நிலையம், ரயில் நிலையம் அருகே நகராட்சிக்கு சொந்தமான வாடகை கார் நிறுத்துமிடம் அகற்றம்-கோர்ட் உத்தரவால் அதிரடி

திருவாரூர் : திருவாரூர் பழைய பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் அருகே நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்து வந்த நகராட்சியின் வாடகை கார் நிறுத்துமிடம் நீதிமன்ற உத்தரவையடுத்து நேற்று அகற்றப்பட்டது.திருவாரூர் நகரில் பழைய பேருந்து நிலையமானது கடந்த 45 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டதாகும்.

அதன் பின்னர் தற்போது புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தாலும், பழைய பேருந்து நிலையத்தையொட்டியவாறு ரயில் நிலையம், வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள், திரையரங்கம் மற்றும் ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட அனைத்து வர்த்தக நிறுவனங்களும் இயங்கி வருவது மட்டுமின்றி மாவட்ட தலைநகராக இருந்து வருவதால் நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சம் பேர் வரையில் இந்த பழைய பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ரயில் நிலையம் முன்பாக நெடுஞ்சாலை ஓரத்தில் வாடகை கார் நிறுத்துமிடம் ஒன்று கடந்த 25 வருடங்களாக இருந்து வந்த நிலையில் நகராட்சி சார்பில் அந்த இடத்தில் ஷெட்டும் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தற்போது திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் மாநிலம் முழுவதும் ரூ ஆயிரக்கணக்கான கோடியில் நெடுஞ்சாலைகள் புதுப்பிக்கும் பணியும், அகலப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் ரூ 100 கோடி மதிப்பில் இந்த நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனையொட்டி திருவாரூரில் பழைய பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் அருகே ரூ 5 கோடி மதிப்பில் சாலைகள் அகலப்படுத்தும் பணியானது நடைபெற்று வருகிறது.

இவ்வாறு சாலை அகலப்படுத்தும் பணிக்கு மேற்படி வாடகை கார் நிறுத்துமிடம் இடையூராக இருந்து வருவதால் அதனை காலி செய்யுமாறு வாடகை கார் உரிமையாளர்களிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறையினர் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இடத்தை காலி செய்ய மறுத்து கார் உரிமையாளர்கள் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்நிலையில் இடத்தை காலி செய்வதற்கு நீதி மன்றம் உத்தரவிட்டதையடுத்து நேற்று இந்த வாடகை கார் ஷெட் அகற்றும் பணியில் நகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறையினர் ஈடுப்பட்டனர். அப்போது மாற்று இடம் வழங்கி விட்டு இடத்தை காலி செய்யுமாறு வாடகை கார் உரிமையாளர்கள் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் தலையீட்டின் பேரில் கார் ஷெட் அகற்றப்பட்டது.

Related Stories: