ரேஷன் கடைகளில் பயன்படுத்தப்படும் பாயின்ட் ஆப் சேல்ஸ் கருவியின் வேகம் அதிகரிக்கப்பட வேண்டும்-பொதுவிநியோக ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

நாகர்கோவில் : ரேஷன் கடைகளில் பயன்படுத்தப்படும் பாயின்ட் ஆப் சேல்ஸ் கருவிகளின் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என ரேஷன்கடை விற்பனையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து பொது விநியோக ஊழியர் சங்க மாநில செயலாளர் குமரி செல்வன் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியதாவது:   குடும்ப அட்டைதாரர்களுக்கு பாயின்ட் ஆப் சேல்ஸ் கருவி மூலம் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. வறுமைகோடு பட்டியலில் உள்ளவர்களுக்கு ஒன்றிய அரசும் அரிசி வழங்குகிறது. வறுமைகோடு பட்டியலில் உள்ளவர்கள் பொருட்கள் வாங்க வரும்போது தமிழக அரசு வழங்கும் பொருட்கள் விநியோகம் செய்யும்போது அவர்களது கைவிரலை பதிவு செய்ய வேண்டும்.

பின்னர் ஒன்றிய அரசு வழங்கும் பொருட்கள் விநியோகம் செய்யும்போது மீண்டும் அவர்களது கைவிரல் பதிவு செய்யப்படும். ஒருமுறை ஒருவர் கைவிரல் பதிவு செய்தால், அடுத்தது 20 நிமிடத்திற்கு பிறகுதான் அவரது கைவிரல் பதிவு செய்ய முடியும். இதனால் அவர்கள் சுமார் 30 நிமிடத்திற்கு மேலாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தமிழக அரசு உரிய கவனத்தில் கொண்டு ஒரு முறை கைரேகை வைத்து பொருட்கள் விநியோகம் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 மாதம் தோறும் 25ம் தேதிக்கு பிறகு பாயின்ட் ஆப் சேல்ஸ் கருவியின் செயல்பாடு மிகவும் வேகம் குறைவாக இருந்து வருகிறது. இதனால் பொருட்கள் விநியோகம் செய்வதற்கு பல மணி நேரம் ஆகிறது. இதனை கருத்தில் கொண்டு பாயின்ட் ஆப் சேல்ஸ் கருவி வேகமாக செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷன் கடை பணியாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் மானிய விலையில் வழங்க வேண்டும். இதனால் தமிழ்நாடு முழுவதும் உள்ள 34 ஆயிரத்து 790 ரேஷன் கடை ஊழியர்கள் பயன் அடைவார்கள்.

இதுபோல் கொரோனா கால கட்டத்தில் பணியாற்றிய போது ஒரு குடும்ப அட்டைக்கு 50 பைசா வீதம் வழங்கப்படும் என அப்போதைய அரசு அறிவித்தது. ஆனால் இதுவரை அந்த பணம் கிடைக்க வில்லை. இந்த பணத்தை ஊக்கதொகையாக வழங்க வேண்டும். குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை அடிப்படையில் சேர்க்காமல், உரிய விசாரணை நடத்தி வறுமைகோடு பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: