மொடச்சூர் வாரச்சந்தையில் பல ஆண்டுகளாக தங்கி இருந்த நரிக்குறவர், ரொம்பர் இனத்தை சேர்ந்த 25 குடும்பத்தினர் அனுப்பி வைப்பு

கோபி :  கோபி அருகே உள்ள மொடச்சூர் வார சந்தையில் பல ஆண்டுகளாக தங்கி இருந்த நரிக்குறவர் மற்றும் ரொம்பர் இனத்தை சேர்ந்த 25 குடும்பத்தினருக்கு அளுக்குளியில் இடம் வழங்கப்பட்டு, நகராட்சி லாரிகள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.கோபி அருகே உள்ள மொடச்சூரில் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு வாரம் தோறும் நடைபெறும் காய்கறி சந்தைக்கு கோபி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களும், கால்நடை சந்தையில் ஏராளமான கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுவதால், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகளும் வியாபாரிகளும் வருவது வழக்கம்.

இந்த சந்தை வளாகத்தில் காய்கறி விற்பனைக்காக கட்டப்பட்ட கட்டிடங்களில் நரிக்குறவர் மற்றும் ரொம்பர் இனத்தை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கி இருந்தனர். இவர்களுக்கு இடமோ, வீடோ இல்லாத நிலையில் சந்தை வளாகத்தையே வீடாக பயன்படுத்தி வந்தனர். நிலையான இருப்பிடம் இல்லாத நிலையில் இவர்களுடைய குழந்தைகளும் கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து நரிக்குறவர் மற்றும் ரொம்பர் இனத்தை சேர்ந்த 50 குடும்பத்தினருக்கு அளுக்குளி அருகே ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா 2 சென்ட் அளவிற்கு அரசு வீட்டு மனை கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சுமார் 25 குடும்பத்தினர் அங்கு சென்று விட்ட நிலையில், மற்றவர்கள் உரிய வாகன வசதி இல்லாததால் சந்தையை விட்டு வெளியேறாமல் இருந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கோபி நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நகராட்சிக்கு சொந்தமான இரண்டு லாரிகளை அனுப்பி, சந்தையில் இருந்த 25 குடும்பத்தினரையும், அவர்களது பொருட்களையும் காவல்துறை பாதுகாப்புடன் அளுக்குளியில் அவர்களுக்கு வழங்கப்பட்ட இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

பல ஆண்டுகளாக நிலையான இருப்பிடம் இல்லாத நிலையில் இருந்து வந்த 50 குடும்பத்தினரும் தற்போது அரசு வழங்கிய இடத்திற்கு சென்றுள்ளனர். நிலையான இருப்பிடத்திற்கு சென்றுள்ள இவர்களின் குழந்தைகளை கல்வி கற்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: