சாமி கும்பிட்ட வாலிபரை திட்டினார் வன்கொடுமை சட்டத்தில் ஊராட்சி தலைவர் கைது: வீடியோ வைரலானதால் அதிரடி

சேலம்: சேலம் அருகே கோயிலில் சாமி கும்பிட்ட வாலிபரை ஜாதி பெயரை சொல்லி திட்டிய ஊராட்சி தலைவர் வன்கொடுமை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். சேலம் அருகே திருமலைகிரியில் இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. கடந்த 26ம்தேதி இரவு 8.30 மணியளவில் திருமலைகிரி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த வாலிபர் பிரவீன்குமார்(26) கோயிலுக்குள் சென்று சாமி கும்பிட்டுள்ளார். திருமலைகிரி ஊராட்சி தலைவர் மாணிக்கம், பிரவீன்குமாரை அழைத்து ஜாதி பெயரை சொல்லி ஆபாசமாக திட்டியுள்ளார். இனிமேல் கோயிலுக்குள் வரக்கூடாது என எச்சரிக்கை செய்து அனுப்பியுள்ளார்.

இந்த வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் நேற்று வேகமாக பரவியது. இதையடுத்து ஊராட்சி தலைவர் மாணிக்கத்தை ஒன்றிய செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நடவடிக்கை எடுத்தார்.

இந்நிலையில் நேற்று வாலிபர் பிரவீன்குமார் புகாரின்படி இரும்பாலை போலீசார், ஊராட்சி தலைவர் மாணிக்கம் மீது வன்கொடுமை, தகாத வார்த்தையால் பேசியது, கொலை மிரட்டல் விடுத்தது என 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர். இதற்கு பல்வேறு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து மறியல் செய்தனர். இதனால் போலீஸ் நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: